டாக்கா:பங்களாதேஷின் தலைநகரான டாக்காவில் உள்ள துணி ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 137 மரணமடைந்துள்ளனர். மரண எண்ணிக்கை 150 ஆக உயரும் என கருதப்படுகிறது.
டாக்காவில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள அஷூலியா மாவட்டத்தில் தஸ்ரின் ஃபாஷன் லிமிடட் என்ற துணி ஆலையின் ஒன்பது மாடிக் கட்டிடத்தில் கடந்த சனிக்கிழமை இரவு 9 மணிக்கு தீப்பிடித்தது. எட்டுபேர் பலியானதாக ஆரம்பக் கட்ட செய்திகள் கூறின.
ஆனால்,ஞாயிற்றுக்கிழமை காலை மீட்பு பணியாளர்கள் தொழிற்சாலைக்குள் நுழைந்தபோது 100 பேர் மரணித்ததை கண்டறிந்தனர். 124 உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உடல்களில் பெரும்பாலானவை தீயில் கருகியுள்ளன. 200 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மின் கசிவே தீ விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
தீ விபத்து நிகழ்ந்தபோது 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஏராளமானோர் மாடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். தப்பிப்பிழைக்க முயன்றபோது ஏற்பட்ட நெரிசலில் பெரும்பாலானோர் இறந்துள்ளனர். மாடியில் இருந்து குதித்த பலரும் விபத்தில் சிக்கினர். தரை தளத்தில் தீ விபத்து ஏற்பட்ட போதிலும் சில நிமிடங்களுக்குள் தீ 6 மாடிகளுக்கும் பரவியதாக நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர். குவித்து போடப்பட்டிருந்த துணிகளில் தீ பற்றியதால் நெருப்பு வேகமாக பரவியது.
இதற்கிடையே பங்களாதேஷின் 2-வது பெரிய நகரமான சிட்டகாங்கின் தெற்கு பகுதியில் வேலை நடந்துகொண்டிருந்த மேம்பாலம் உடைந்து 13 பேர் மரணித்துள்ளனர். 50 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவு எட்டரை மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. நன்றி, தூது
0 comments:
Post a Comment