Wednesday, May 5, 2021

நரேந்திர மோதியின் தொகுதியை சிதைக்கும் கொரோனா: கடுஞ்சினத்தில் மக்கள்



ஹிந்துக்களின் புனித நகரமான வாரணாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையில் சிக்கி மீள முடியாமல் தவித்து வருகின்றன.

இத்தகைய கடினமான தருணத்தில் தங்களது எம்பியான பிரதமர் நரேந்திர மோதி எங்கே போனார் என்று பலர் ஆவேசமாகக் கேட்கத் தொடங்கியுள்ளனர்.

இரண்டாவது அலையின் தீவிரத்தால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியைக் கடந்துவிட்டது. 2.2 லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்துவிட்டனர். வாரணாசியில் மருத்துவக் கட்டமைப்பு முடங்கிவிட்டது. மருத்துவமனைகளில் இடமில்லை.

ஆக்சிஜன் கிடையாது. அழைத்தால் ஆம்புலன்ஸ்கள் வருவதில்லை. கொரோனா தொற்று இருக்கிறதா என்று பரிசோதனை செய்யவதற்குக்கூட ஒரு வாரம் காத்திருக்க நேரிடுகிறது. கடந்த 10 நாள்களாக விட்டமின், பாரசிட்டமால் போன்ற அடிப்படையான மருந்துகள் கூட மருந்தகங்களில் கிடைப்பதில்லை.

"ஆக்சிஜனும் படுக்கையும் தேவை என்று வரும் அழைப்புகளை எங்களால் சமாளிக்க முடியவில்லை" என்று பெயர்கூற விரும்பாத மருத்துவப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.

"மிகவும் அடிப்படையான மருந்துகளுக்கே தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், காலாவதியான மருந்துகளை மக்கள் உட்கொள்கின்றனர். கேட்டால் பலன் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. அதுவாவது கிடைக்கிறதே என்கிறார்கள்" என்று கூறுகிறார் அந்த மருத்துவப் பணியாளர்

வேகமான பரவலுக்கு என்ன காரணம்?

மார்ச் மாதத் தொடக்கத்திலேயே பெருஞ்சிக்கலுக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியதாக நகர மக்கள் கூறுகிறார்கள். டெல்லியிலும் மும்பையிலும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் நெரிசல் மிகுந்த ரயில்களிலும் பேருந்துகளிலும் வாரணாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குத் திரும்பினார்கள்.

மார்ச் 29-ஆம் தேதி ஹோலி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக பலர் சொந்த ஊருக்கு வந்தார்கள். மேலும் பலர் நிபுணர்களின் அறிவுரையை மீறி ஏப்ரல் 18-ஆம் தேதி நடத்தப்பட்ட கிராமசபைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வந்தார்கள்.

மாநிலம் முழுவதும் நடந்த இந்தத் தேர்தலில் பணியாற்றிய 700 ஆசிரியர்கள் கொரோனா தொற்றால் இறந்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. கொரோனா பரவலுக்கு தேர்தலும் முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது.

கொரோனா பரவல் அதிகரித்த சில நாள்களிலேயே வாரணாசியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பிவிட்டன. 25 வயதான ரிஷப் ஜெய்னின் அனுபவம் மிகவும் கடினமானது. கொரோனா தொற்று ஏற்பட்ட தனது 55 வயது அத்தைக்காக நாள்தோறும் 30 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து, 5 மணி நேரம் காத்திருந்து சிலிண்டரில் ஆக்சிஜன் நிரப்ப வேண்டியிருந்ததாக அவர் கூறுகிறார்.

"80க்கும் கீழே ஆக்சிஜன் அளவு சென்றபோது மிகவும் பயந்தோம். மருத்துவமனைகளில் படுக்கை எதுவும் கிடைக்கவில்லை. ஆக்சிஜன் சிலிண்டர் கேட்டு பல இடங்களுக்கு தொலைபேசியில் அழைத்தோம். 12 - 13 மணி நேரமாக 25 தொலைபேசி எண்களுக்குப் பேசியும் பலன் கிடைக்கவில்லை. கடைசியில் சமூக வலைதளம் மூலம் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் ஆக்சிஜன் சிலிண்டர் கிடைத்தது. இப்போது அவர் படிப்படியாகக் குணமடைந்து வருகிறார்"

நகரில் நிலைமை மோசமடைவதை அறிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம், வாரணாசி உள்ளிட்ட மாநிலத்தின் 4 நகரங்களை ஒரு வாரத்துக்கு முடக்குமாறு உத்தரவிட்டது. "நமது மருத்துவக் கட்டமைப்பை கொரோனா சிதைத்துவிட்டது" என நீதிமன்றம் கூறியது. ஆனால் மாநில அரசு கேட்டவில்லை. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. "மக்களின் உயிரையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டியது தங்களது பொறுப்பு," என்று வாதிட்டது.

ஆனால் சொன்னபடி மாநில அரசு எதையும் பாதுகாக்கவில்லை என்று விமர்சகர்கள் இப்போது கூறுகிறார்கள். மாவட்ட நிர்வாகம் வார இறுதி முடக்கத்தை அமல்படுத்த, அச்சம் காரணமாக ஏராளமான கடைகளும் நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருப்பதால் ஆயிரக்கணக்கானோர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துவிட்டனர். கொரோனா இன்னும் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது.

புள்ளி விவரங்கள் மீதான சந்தேகம்

வாரணாசியில் இதுவரை 70,612 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், 690 பேர் இறந்துவிட்டதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு மட்டும் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை 46,280. உயிரிழப்புகளைப் பொறுத்தவரை நாள்தோறும் 10 -11 ஆகிய எண்களைச் சுற்றியே அரசு ஆணவங்களில் பதிவு செய்யப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இறந்தவர்கள் எண்ணிக்கை 16 என்கிறது அரசு. ஆனால் நான் பேசிய ஒவ்வொருவரும் இது போலியானது என்று மறுக்கிறார்கள்.

வாரணாசியின் கங்கைக் கரையில் இருக்கும் ஹரீஷ்சந்திரா மற்றும் மணிகர்ணிகா ஆகிய இரு முக்கிய மயானங்களிலும் கடந்த ஒரு மாதமாக சிதைகள் எப்போதும் எரிந்து கொண்டிருப்பதாக அப்பகுதியில் நீண்ட காலம் வசிக்கும் ஒருவர் கூறுகிறார்.

முன்பெல்லாம் இந்த இரு மயானங்களிலும் 80 முதல் 90 உடல்கள் எரிக்கப்படும் என்று கூறும் அவர், இப்போத 300 முதல் 400 உடல்கள் எரிக்கப்படுவதாகத் தெரிவிக்கிறார்.

"இந்த அதிகரிப்புக்கு என்ன காரணம் கூறுவீர்கள்? பெரும்பாலானோர் இதய-நுரையீரல் செயலிழப்பு காரணமாக இறந்துவிட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் நலமாக இருக்கும் இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறப்பது ஏன்" என்று கேட்கிறார் அவர்.

குறுகிய சந்தின் இரு புறங்களிலும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு உடல்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்த காணொளியை வாரணாசியைச் சேர்ந்த ஒருவர் அண்மையில் பகிர்ந்திருந்தார். 10 நாள்களுக்கு முன்பு புதிதாக இரு மயானங்கள் அமைக்கப்பட்டன. ஆனாலும் இரவும் பகலும் அவை இயங்க வேண்டியிருக்கிறது.

கிராமங்களுக்கும் பரவும் தொற்று

இந்தச் சோகம் வாரணாசி நகரத்துடன் நிற்கவில்லை. சிறு நகரங்கள், தூரக் கிராமங்களிலும் தொற்று பரவியிருக்கிறது. சிராய்காவோன் என்று 110 கிராமங்களைக் கொண்ட ஒன்றியத்தின் தலைவரான சுதீர் சிங் பாப்பு பிபிசிடம் பேசினார்.

ஒவ்வொரு கிராமத்திலும் நாள்தோறும் 5 முதல் 10 பேர் இறப்பதாகக் கூறிய அவர் சில கிராமங்களில் 15 முதல் 30 பேர் வரை உயிரிழப்பதாக அவர் தெரிவித்தார்.

"இந்த ஒன்றியத்தில் மருத்துவமனைகளில் இடமே இல்லை. ஆக்சிஜன் கிடையாது. மருந்துகளும் இல்லை. அரசு மருத்துவமனைகள் நிரம்பிவிட்டன.. தனியார் மருத்துவமனைகள் நோயாளியைப் பார்ப்பதற்கு முன்னரே 2 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை முன்தொகை கேட்கின்றனர். நாங்கள் போக இடமில்லை"

நகரத்தைவிட தங்களது கிராமத்தில் நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறுகிறார் அய்தே என்ற கிராமத்தில் வசிக்கும் கமல் காந்த் பாண்டே என்பவர். "எங்களது கிராமத்தில் அனைவருக்கும் பரிசோதனை செய்தால், பாதி பேருக்கு தொற்று இருக்கும். ஏராளமானோருக்கு இருமல், காய்ச்சல், உடல் வலி, மணம்-சுவை அற்றுப்போதல் போன்ற அறிகுறிகள் இருக்கின்றன" என்கிறார் அவர்.

அய்தே கிராமத்தில் இறந்துபோவோர் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. ஏனென்றால் இங்கு பரிசோதனைகளே நடப்பதில்லையே என்கிறார் பாண்டே.

"இது பிரதமரின் தொகுதி. அப்படியிருந்தும் எங்களால் மூச்சு விடமுடியவில்லை"

"மோதி தலைமறைவு"

கங்கை நதியுடனும் வாரணாசியுடனும் அங்கு வாழும் மக்களுடன் தனக்கு சிறந்த பிணைப்பு இருப்பதாகக் கூறுபவர் பிரதமர் மோதி. ஆனால் கொரோனா வைரஸ் நகரை அழித்து, மருத்துவக் கட்டமைப்புகளை முடக்கியிருக்கும் நிலையில் தொகுதிப் பக்கம் அவர் வரவே இல்லை.

தங்களுடைய எம்.பி. தேர்தல் பரப்புரைக்காக பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை 17 முறை மேற்கு வங்கத்துக்குச் சென்று வந்ததை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

கிராமப்புறத் தேர்தல்கள் நடப்பதற்கு ஒரு நாள் முன்னதாக வாரணாசியின் நிலைமை குறித்து பிரதமர் மோதி தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டும் வெறும் கண்துடைப்பு என்று கோபமாகக் கூறுகிறார் ஒரு உணவக உரிமையாளர்.

வாரணாசி மக்கள் எப்படியாவது போகட்டும் என்று விட்டுவிட்டு பிரதமரும் முதல்வரும் ஒளிந்துகொண்டார்கள் என்கிறார் அவர். "உள்ளூர் பாஜக தலைவர்களும் வரவில்லை. தொலைபேசியை அணைத்து வைத்திருக்கிறார்கள். மருத்துவமனை, ஆக்சிஜன் சிலிண்டர் என பல்வேறு வகையிலும் அவர்கள் உதவ வேண்டிய நேரம் இது. ஆனால் நிர்வாகம் சீர்குலைந்து கிடக்கிறது. மக்கள் கடும் சினத்துடன் இருக்கிறார்கள்" என்றார் அந்த உணவக உரிமையாளர்.

இதற்கு பிரதமரைத் தவிர வேறு யாரும் காரணமில்லை என்கிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கௌரவ் கபூர்.

"அவர்தான் பொறுப்பு. கடந்த ஒரு மாத காலமாக வாரணாசியிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் நிகழ்ந்திருக்கும் ஒவ்வொரு மரணத்துக்கும் அவர்தான் பொறுப்பு" என்றார் கபூர்

நகரத்தில் வசிக்கும் பிறரைப் போல கபூரும் கொரோனாவால் நிறைய இழந்திருக்கிறார். இரு வாரங்களுக்கு முன்பு அவரது அத்தை, மாமா இறந்துவிட்டனர். இப்போது நண்பரின் சகோதரர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். நான் பேட்டிக்காக தொலைபேசியில் அவரை அழைத்தபோது கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.

தொற்று பரவி எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியபோது, படுக்கை கேட்டும், ஆம்புலன்ஸ் கோரியும் கணக்கிலடங்கா அழைப்புகள் வந்ததாகக் கூறுகிறார் கபூர்.

"இப்போது மக்கள் புரிந்து கொண்டார்கள். ஆக்சிஜன் சிலிண்டர்கள் கேட்டு அழைப்புகள் வருகின்றன"

அனைத்து வகையிலும் வாரணாசியின் நிலைமை மோசமடைந்திருக்கிறது. மீள்வதற்கு முன் இன்னும் மோசமடையும் என்றே தோன்றுகிறது. புறநகரங்களிலும் கிராமப்புறங்களிலும் பொருள்களுக்கு தட்ப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இது மிக மோசம்.

"தங்களிடம் ஆக்சிஜன் அளவைச் சோதிக்கும் ஆக்சிமீட்டர்கள்கூட இல்லை என பல மருத்துவர்கள் என்னிடம் தெரிவித்தனர். அதனால் ஆக்சிஜன் அளவு குறைவது தெரியாமல் தூக்கத்திலேயே நோயாளிகள் இறந்துவிடுகின்றனர்" என்று பரிசோதனை மையம் ஒன்றின் உரிமையாளர் கூறினார்.

"எனது மனைவிக்கும் குழந்தைக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டபோது மருத்துவரை தொலைபேசியில் அழைத்து அவர் கூறிய அறிவுரைகளைக் கேட்டுச் செயல்பட்டேன். ஆனால் கிராமத்தில் கல்வியறிவற்றவர்களால் என்ன செய்ய முடியும்? அவர்கள் எப்படி வாழ்வார்கள் என உங்களுக்கே தெரியும். கடவுளின் கருணையில்தான் அவர்கள் வாழ்கிறார்கள்.."

0 comments:

Post a Comment