Friday, April 16, 2021

வெளிநாட்டு வாழ்க்கை பற்றி ஒரு சிறிய கட்டுரை.

 உழைக்க வேண்டிய வயசு இதுதான் என்று விமானம் ஏறி வந்தோம். வாழ வேண்டிய

வயதும் இதுதான் என்பதை மறந்து.
வெளிநாடு என்பது ஒரு வினோதமான சிறைச்சாலை அதில் இருப்பவன் வெளியே
வர துடிக்கிறான்...!!!
வெளியே இருப்பவன் உள்ளே வர துடிக்கிறான். வெளிநாட்டில் சம்பாதிக்கும்
குடும்பங்களே ஆடம்பரத்தை குறைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் செலவு செய்வது
பணம் அல்ல. சம்பாதிப்பவரின் வயதை.
என்னை வளர்த்த பெற்றோரின் கடைசி காலத்திலும் இல்லாமல். நான் பெத்த பிள்ளை வளரும் தருணத்திலும் அருகில்
இல்லாமல்...!!!
என்ன வாழ்க்கை இது. வெளிநாட்டு வாழ்க்கை ஒரு மெழுகுவர்த்தி போல தான்.
தூரத்தில் இருந்து பார்த்தால் ஒளி மட்டும் தெரியும் அருகில் சென்று பாருங்கள் அவர்கள் உருகி கண்ணீர் வடிப்பது தெரியும்.
ஓடி ஓடி உழைத்தாலும். கையும் காலும் விறைத்தாலும் அன்பாக பேச யாருமில்லை.
காசு என்பது நிற்கவில்லை. கடன் தொல்லை தீரவில்லை. சொன்னாலும் யாரும்
நம்பவில்லை...!!!
உழைக்க வேண்டிய வயது என விமானம் ஏறி வந்து. வாழ வேண்டிய வயதை தொலைத்து நிற்பதே இந்த வெளிநாட்டு வாழ்க்கை. உலகில் உள்ள வேதனைகளின் மொத்த உருவம் தான் இந்த வெளிநாட்டு வாழ்க்கை. பிறந்த குழந்தைக்கு ஒரு வயது ஆன பின்னும் அப்பாவை பார் என்று அறிமுகம் செய்யும் அவலம் எங்களுக்கு மட்டும் தான்...!!!
வெளிநாட்டு வாழ்க்கை தலையணையை சரி செய்து சுகமாய் தூங்கிய நாட்களை விட.
சோகம் நிறைந்த அசதியில் தூங்கிய நாட்கள் தான் அதிகம். வாழ்க்கை எனும் பயணத்தில் வேலை தேடி வெளிநாடு
செல்லும். நமக்கு நெருக்கமானவர்களின் பயணம் நம் கல் மனதையும் கரையைச் செய்கின்றது. யாரும் இல்லாமல் கூட
நிம்மதியாக வாழ்ந்து விடலாம். ஆனால் எல்லோரும் இருந்தும் அனாதையாக வாழ்வதே கொடுமை நிறைந்த வாழ்க்கை...!!!
உனக்கென்ன விமானப்பயணம் வெளிநாட்டு ராஜ வாழ்க்கை. என்று ஊருக்கு போனதும் உள்ளூர் வாசிகள் எங்களை
பார்த்து விடும் பெருமூச்சு. வளைகுடா நாட்டின் அரபு நாட்டு வெப்பத்தை விட
சற்று அதிகமாகவே சுடுகிறது. கல்யாணம் முடிந்த பிறகு விடுமுறை முடிந்து. வெளிநாடு போகும் தருணம் என் கருவை சுமக்கும்
மனைவியையும் சேர்த்து. என் நெஞ்சில் சுமந்து கொண்டு தான் விமானம் ஏறுகின்றேன்...!!!
வறுமைக்காக அயல்நாடு சென்று
பணத்தை சேமிப்பதும். விடு முறைக்கு தாய் நாடு வந்து நினைவுகளை சேமிப்பதுமே
வெளிநாட்டு வாழ்க்கை. உள்நாட்டில் அடுப்பு எரிய வெளிநாட்டில் விறகாய் எரியும்
வாழ்க்கை. இதுதான் வெளிநாட்டு வாழ்க்கை. விசாவிற்கு பணத்தைக் கட்டி.
காதலுக்கு சமாதி கட்டி. இளமைக்கு பூட்டு போட்டு. தொடர்கிறது வெளிநாட்டு
பயணம்...!!!
டாலருக்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்துவிட்டு. மீட்க முடியாமல் நீரிலேயே மூழ்கிக் கிடக்கும் மீன் குஞ்சுகள் நாங்கள். பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு குதூகளிக்க முடியாமல்
தங்களின் வாழ்த்துக்களை மனம் முழுக்க சோகத்தோடு. கைப்பேசியில் கூக்குரலிட்டு கொஞ்சி மகிழ நேரில் இல்லாத காற்றலைகள் நாங்கள்...!!!
இங்கே கண்ணே கனியமுதே என்றெல்லாம் தன் பெற்றக்குழந்தையை. நெஞ்சுருகக் கட்டித்தழுவ முடியாதொரு துர்பாக்கியசாலிகள் நாங்கள். கணிப்பொறியிலும் கைப்பேசியிலும் சொந்த பந்தங்களின் குரல் கேட்டு கேட்டு. எங்கள் பாசம் கூட இங்கு கமர்ஷியல் ஆகிப்போனது தொலைதூர பாசம் செய்தே. காட்டியே தொலைந்து போனவர்கள் நாங்கள்...!!!
நான் இங்கே நல்லா இருக்கேன் என்று. எப்போதும் சொல்லும் இயற்கை நிலை குரலுக்கு சொந்தக்காரர்கள் நாங்கள்.
வியர்வையில் நாங்கள் உழன்றாலும் விடுமுறைக்கு போகும்முன் வாசனைப்பூச்சு வாங்க மறப்பதில்லை நாங்கள். எங்கள் வியர்வையின் வாசம் வீட்டில் உள்ளோர் அறியாமல் இருக்க...!!!
கணிப்பொறிக்குள் அகப்பட்டுக்கொண்ட எலிகள். நாங்கள் கலப்பை பிடிக்கவில்லை ஆனால் நாங்களும் களைத்துத்தான் போகிறோம். எண்ணெய் கிணற்று தவளைகள் நாங்கள். வாயுக்குழாயில் சிக்கிக்கொண்ட வாயில்லா பூச்சிகள் நாங்கள். திரைகடலோடி திரவியம் தேடும் திசைமாறிய பறவைகள் நாங்கள்...!!!
உனக்கென்ன விமானப்பயணம் வெளிநாட்டு ராஜ வாழ்க்கை. என்று ஊருக்கு போனதும் உள்ளூர் வாசிகள் விடும் பெருமூச்சு. வளைகுடா நாட்டின் அரபி நாட்டு வெப்பத்தை விட சற்று அதிகமாகவே சுடுகிறது. ஆரம்பத்தில் முதலீடில்லா தொழில் இது என்று பெருமிதப்பட்டோம். எங்களுக்கே தெரியாமல் எங்கள் இளமையை அல்லவா முதலீடு...!!!
செய்திருக்கின்றோம் இப்போதுதான் புரியத்துவங்கியது சேர்ந்தே நரைக்கவும் துவங்கியது. நாங்கள் முதலீடு செய்தது எங்கள் வாழ்க்கையை வாலிபத்தை.
இழப்பீடு கிடைக்காத இழப்பு இது நஷ்ட்டஈடு கிடைக்காத நஷ்ட்டம் இது...!!!
யாருக்காக...? எதற்காக...? ஏன்...?
தந்தையின் கடன், தங்கையின் திருமணம், தம்பியின் படிப்பு, சொந்தமாய் வீடு குழந்தையின் எதிர்காலம், குடும்பச்சுமை
இப்படி காரணம் ஆயிரம் தோரணம்போல் கண் முன்னே. மனைவியின் கண்சிமிட்டல்/சினுங்கள், அம்மாவின் அரவணைப்பு,
அப்பாவின் அன்பு, குழந்தையின் மழலை, நண்பர்களுடன் அரட்டை இப்படி எத்தனையோ இழந்தோம்...!!!
எல்லாவற்றையும் இழந்த நாங்கள் இன்னும் இங்கே ஏன் இருக்கின்றோம். இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதாலா...?
இல்லை இழப்பிலும் சுகம் கண்டு கொண்டதாலா...? சொந்த மண்ணில்
சொந்தங்களோடு சோறு திண்பவன்
யாரடா...? இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா...?

0 comments:

Post a Comment