கோவை மற்றும் நாமக்கல் பகுதிகளில் ஆலைகளில் வேலைபார்த்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடிவு செய்தனர். இதற்காக ரயில்களில் முன்பதிவு செய்தபோது இடம் கிடைக்காமல் எப்படி ஊருக்குச் செல்வது என தவித்து வந்துள்ளனர்.
இதை அறிந்த புரோக்கர்கள் சிலர், தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்களைச் சந்தித்து, கோவை, நாமக்கல் பகுதியில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊருக்குச் செல்ல ரயிலில் இடம் கிடைக்காமல் இருக்கிறார்கள். இவர்களை நாம் பேருந்தில் அழைத்துச் சென்று பீகாரில் விட்டுவிட்டு, அங்கிருந்து தமிழகம் வரும் வட மாநில தொழிலாளர்களை அழைத்து வந்தால் ரூபாய் 2 லட்சத்திலிருந்து 4 லட்சம் வரை கிடைக்கும் என ஆசையைத் தூண்டியுள்ளனர்.
இதை நம்பிய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், வட மாநில தொழிலாளர்களைப் பேருந்தில் ஏற்றிக் கடந்த மாதம் 15ம் தேதி அனுப்பிவைத்துள்ளனர். மேலும் பேருந்து ஓட்டுநர்களுக்குச் சாப்பாட்டுப் படி மட்டும் கொடுத்துள்ளனர்.
பின்னர், பீகார் மாநிலம் பாட்னாவுக்குச் சென்று வட மாநில தொழிலாளர்களை இறக்கிவிட்டுள்ளனர். இதையடுத்து தமிழகத்திற்குச் செல்ல தொழிலாளர்கள் வருவார்கள் என ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் காத்திருந்துள்ளனர். ஆனால் ஒருவர் கூட தமிழகம் வர தயாராக இல்லை என்பதை அறிந்த ஓட்டுநர்கள் அதிர்ச்சியடைந்து, இதுபற்றி பேருந்து உரிமையாளரிடம் தகவலைத் தெரிவித்துள்ளனர்.
ஆனால், பேருந்து உரிமையாளர்கள் பயணிகள் இல்லாமல் பீகாரிலிருந்து காலியாக வந்தால் டீசல் செலவு கட்டுப்படியாகாது எனக் கூறி, ஒருசில நாட்கள் அங்கேயே இருந்து பயணிகளை ஏற்றி வாருங்கள் என தெரிவித்துள்ளனர். இதனால் ஓட்டுநர்கள் என்னசெய்வது என்று தெரியாமல் கடந்த 25 நாட்களாகப் பீகாரிலேயே சாப்பாட்டிற்குக் கூட வழி இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இதையடுத்து, பேருந்தை இயக்கி சம்பாதித்துக் கொடுக்கும் ஓட்டுநருக்கும், அவர்களது குடும்பத்திற்கும் சாப்பாட்டிற்குக் கூட பணம் அனுப்ப இயலாத பேருந்து அதிபர்களுக்கு 3 கோடி ரூபாய் பேருந்து எதற்கு என ஓட்டுநர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் பீகாரில் தவித்து வரும் பேருந்து ஓட்டுநர்கள் பத்திரமாகச் சொந்த ஊர் திரும்ப கோவை, நாமக்கல் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேருந்து ஓட்டுநர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்திலிருந்து பீகார் சென்ற ஆம்னி பேருந்துகள், தமிழகம் வர பயணிகள் இல்லாததால் ஊர் திரும்ப வழியில்லாமல் 25 நாட்களுக்கு மேலாகப் பேருந்து ஓட்டுநர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment