23 Nov 2012
புதுடெல்லி:1996-ஆம் ஆண்டு 13 பேர் பலியான லஜ்பத் நகர் குண்டுவெடிப்பு வழக்கில் 2 பேரின் மரணத்தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்துச் செய்தது. இவ்வழக்கில் இன்னொரு நபருக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. மேலும் இவ்வழக்கின் விசாரணையில் கடுமையான தவறுகளை இழைத்ததாக டெல்லி போலீஸ் நீதிமன்றம் கடுமையாக சாடியது.
தீவிரவாதிகள் என்று குற்றம் சாட்டி போலீஸ் கைது செய்த நபர்களுக்கு விசாரணை நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்தது. மிர்ஸா நாஸர் ஹுஸைன், முஹம்மது அலி பட் என்ற கில்லே ஆகியோரின் மரணத் தண்டனை ரத்துச் செய்யப்பட்டு அவர்கள் விடுதலைச் செய்யப்பட்டனர். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இன்னொரு நபரான முஹம்மது நவ்ஷாதின் மரணத் தண்டனையை ஆயுள் தண்டனையாக நீதிமன்றம் குறைத்தது. அதேவேளையில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜாவேத் அஹ்மத் கானின் ஆயுள்தண்டனையை நீதிமன்றம் உறுதிச் செய்தது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சாதாரண ஆதாரங்களை கூட டெல்லி போலீஸ் தாக்கல் செய்யவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது. அதுமட்டுமல்ல, அடையாள அணிவகுப்பு நடத்தப்படவில்லை, முக்கிய சாட்சிகளின் வாக்குமூலங்கள் சேகரிக்கவில்லை, வழக்கில் டைரி கூட இல்லை என்று நீதிமன்றம் விமர்சித்தது.
1996-மே 21-ஆம் தேதி லஜ்பத் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் 13 பேர் பலியானார்கள். 38 பேருக்கு காயம் ஏற்பட்டது. ஜம்மு கஷ்மீர் லிபரேசன் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டனர். 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விசாரணை நீதிமன்றம் இவர்களுக்கு தண்டனையை அறிவித்தது. இவ்வழக்கின் இதர இரண்டு நபர்கள் சிறைத் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். நன்றி, தூது
0 comments:
Post a Comment