Friday, November 30, 2012

காவிரி:கர்நாடகம் கைவிரிப்பு – இரு மாநில முதல்வர்களின் பேச்சு வார்த்தை தோல்வி!


Jaya, Shettar talks over Cauvery water dispute fails
    30 Nov 2012 பெங்களூர்:உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி, காவிரி நதி நீர் பங்கீட்டுப் பிரச்னை தொடர்பாக தமிழக, கர்நாடக முதல்வர்கள் இடையே பெங்களூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என்று கர்நாடகம் கைவிரித்துவிட்டதாக பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
    பெங்களூரில் பழைய விமான நிலையச் சாலையில் அமைந்துள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    தமிழக அரசு சார்பில், முதல்வர் ஜெயலலிதா, பொதுப் பணித் துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம், தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி, முதல்வரின் தனிச் செயலர்கள் ஏ.ராமலிங்கம், கே.என். வெங்கடரமணன், பொதுப் பணித் துறை செயலர் எம்.சாய்குமார், காவிரி ஆணையக் குழுத் தலைவர் ஆர்.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     கர்நாடக அரசு சார்பில், அந்த மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், துணை முதல்வர் ஆர்.அசோக், நீர்ப் பாசனத் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, சட்டத் துறை அமைச்சர் சுரேஷ்குமார், தலைமைச் செயலர் எஸ்.வி.ரங்கநாத், கூடுதல் தலைமைச் செயலர் சுபீர் ஹரிசிங், முதல்வரின் முதன்மைச் செயலர்கள் பிரதீப்சிங் கரோலா, லட்சுமிநாராயண், முதல்வரின் பொருளாதார ஆலோசகர் கே.வி.ராஜு, நீர்ப்பாசனத் துறை செயலர் சத்தியமூர்த்தி, நீர்ப் பாசனத் துறை ஆலோசகர்கள் கேப்டன் ராஜாராவ், ரகுராம், மனு ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒரு மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியது:
     “குறுவை நெல் சாகுபடியை இழந்துள்ள நிலையில், சம்பா நெல் சாகுபடிக்காக தமிழக விவசாயிகள் காத்திருக்கின்றனர். பாசனத்துக்கு போதுமான தண்ணீர் இல்லாததால் மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் சம்பா நெல் சாகுபடியையும் இழக்க நேரிடும். தமிழகத்தில் 14.93 லட்சம் ஏக்கர் பரப்பில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    நவம்பர் 27-ஆம் தேதி நிலவரப்படி மேட்டூர் அணையில் 16.34 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. இதில், 5 டிஎம்சி தண்ணீர் அணை சேமிப்புக்கும் (டெட் ஸ்டோரேஜ்), 5 டிஎம்சி தண்ணீர் குடிநீர் தேவைக்கும் பயன்படுத்தப்படும். மீதமுள்ள 6.34 டிஎம்சி தண்ணீர் சம்பா நெல் சாகுபடிக்கு போதாது. இந்த தண்ணீரையும் அடுத்த 6 நாள்களுக்கு மட்டுமே திறந்துவிட முடியும்.
    சம்பா நெல் சாகுபடியைக் காப்பாற்ற வேண்டுமானால், அடுத்த 65 நாள்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும். ஆனால், மேட்டூர் அணையில் இதற்கான தண்ணீர் இருப்பு இல்லை. இந்த நிலையில், கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடாவிட்டால், பயிர் கருகி, பேரிடர் நிகழும் அபாயம் உள்ளது.
    தமிழகத்தின் நிலை மற்றும் தண்ணீர் தேவையை கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரிடம் விளக்கினேன். சம்பா நெல் சாகுபடியைக் காப்பாற்ற அடுத்த 15 நாள்களில் குறைந்தபட்சமாக 30 டிஎம்சி தண்ணீரை திறந்துவிடுமாறு கோரினேன். அதற்கான உத்தரவை உடனடியாகப் பிறப்பிக்குமாறும் கேட்டுக் கொண்டேன்.
    எங்கள் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காத கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், சொட்டுத் தண்ணீர் கூட தர முடியாது என்று கூறிவிட்டார். காவிரி பிரச்னை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வெள்ளிக்கிழமை (நவம்பர்-30) விசாரணைக்கு வருகிறது. அப்போது, இரு மாநில முதல்வர்கள் கூட்டத்தின் முடிவுகளை எடுத்துரைப்போம். தண்ணீர் திறந்துவிட தமிழகம் விடுத்தக் கோரிக்கையை கர்நாடக அரசு நிராகரித்துவிட்டது. இதையடுத்து, தமிழகத்துக்கு தண்ணீர் கேட்டு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்” என்றார் அவர்.
    கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறியது: “உச்சநீதிமன்ற உத்தரவுக்கிணங்க, காவிரி பிரச்னை தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். கர்நாடகத்தில் நிலவும் கடும் வறட்சி நிலை, குடிநீர் தேவையின் அளவு, நிலுவைப் பயிர் பாசனத் தேவை, அணைகளின் நீர் இருப்பு ஆகியவற்றை கூட்டத்தில் எடுத்துரைத்தோம்.
     தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது மாநில நிலையை விளக்கினார். காவிரி நதிப் படுகை அணைகளில் 37 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. பெங்களூர், மைசூர் உள்ளிட்ட ஊரகப் பகுதிகளின் குடிநீர்த் தேவைக்கு மட்டும் 20 டிஎம்சி தண்ணீர் தேவை. சுற்றுச்சூழல் காரணங்களுக்கு திறந்துவிட 10 டிஎம்சி தண்ணீரை இருப்பு வைத்திருக்க வேண்டும். நிலுவைப் பயிருக்கு விடுவதற்கு கர்நாடகத்தில் 7 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது.
     கர்நாடகத்தின் நீர்த் தேவை அதிகமாக இருக்கும்போது, தமிழகத்துக்கு கூடுதல் நீர் திறந்துவிட முடியாது என்பதை தெளிவுப்படுத்தினேன். தமிழகம் 30 டிஎம்சி தண்ணீர் கேட்கிறது. 37 டிஎம்சி நீரில், 30 டிஎம்சி நீரைத் தமிழகத்துக்கு அளித்துவிட்டால், கர்நாடகத்தின் நிலை மோசமாகும். இதைப் பொருள்படுத்தாமல், தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்பதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உறுதியாக இருந்தார்.
    காவிரி பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில், 3 அம்சங்களை முன்வைத்தோம். மேட்டூர், சிவனசமுத்திரத்தின் கீழ்ப் பகுதியில் நீர் இருப்பைப் பெருக்குவதற்கு அணைகள் கட்டலாம். இந்த நீரை இடர்ப்பாடு காலத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். இடர்ப்பாட்டு பங்கீட்டுக் கொள்கையை வகுக்க இரு மாநிலப் பிரதிநிதிகள் அடங்கிய சமரசக் குழுவை அமைக்கலாம். இரு மாநில காவிரி நதிப் படுகை பாசனப் பகுதிகளில் ஒழுங்கமைவு வேளாண் நடைமுறைகளைப் பின்பற்றி, பாசனத்தை நெறிப்படுத்த இரு மாநில விவசாயிகள் அடங்கிய வல்லுநர் குழுவை அமைக்கலாம் என்று தெரிவித்தோம்.
    கர்நாடகத்தின் நீர் இருப்பு மற்றும் தேவைகள் குறித்து மறுமதிப்பீடு செய்து, மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். அதற்காக சென்னை செல்லவும் தயாராக இருக்கிறோம் என்றோம். எங்கள் யோசனையை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்கவில்லை.
     இந்த நிலையில், கர்நாடகத்தின் நிலையை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் எடுத்துரைப்போம். தேசிய கட்சியான பாஜக, இரு மாநிலங்களுக்கு இடையிலான இந்த சிறிய பிரச்னையில் தலையிட முடியாது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறோம்.” என்றார் அவர்.
     காவிரிப் பிரச்னையில் 1974-ஆம் ஆண்டில் இருந்து, 26-ஆவது முறையாக தமிழக-கர்நாடக முதல்வர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. தமிழகத்தின் கோரிக்கையை நிறைவேற்ற கர்நாடக அரசு மறுத்துவிட்டதால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. thanks thoothu

0 comments:

Post a Comment