Friday, November 2, 2012

சவூதி: திருமண விழாவில் தீ விபத்து – 25 பேர் பலி!


தம்மாம்:சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அப்கைகில் திருமண விழா நடைபெற்ற அரங்கில் தீ விபத்து ஏற்பட்டதால் 25 பேர் பலியாகினர். 30 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அப்கைகில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள ஐன் தார் என்ற கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 8.30 க்கு இவ்விபத்து ஏற்பட்டது.திருமண கொண்டாட்டத்தின் போது மின்சார லைன் வெடித்து திருமணப் பந்தலில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
ஐந்து குழந்தைகள், ஏழு ஆண்கள், மூன்று இந்தோனேஷியாவை சார்ந்த வீட்டுப் பணியாளர்கள், மூன்று பாடகர்கள் உள்பட 25 பேர் மரணித்தனர். திருமண கொண்டாட்டத்தின் போது இளைஞர்கள் உற்சாகத்தில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். தோட்டா அருகில் உள்ள 110 கே.வி லைனில் மோதி கம்பி வெடித்து திருமணப்பந்தலில் விழுந்துள்ளது. பெண்கள் பகுதியில் மின்சார கம்பி வெடித்து விழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தீப்பற்றி விபத்து
ஏற்பட்டது.
சவூதி ரெட்க்ரஸண்ட், சிவில் டிஃபன்ஸ் துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட கிழக்கு மாகாண ஆளுநர் அமீர் முஹம்மது பின் ஃபஹத் பின் அப்துல் அஸீஸ் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி அளிக்கவும், விபத்துக் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார். திருமண கொண்டாட்டங்களில் வானை நோக்கி துப்பாக்கியால் சுடுவது சவூதி இளைஞர்களிடையே வழக்கமான ஒன்றாகும். முன்பு இதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் மீண்டும் அனுமதிவழங்கப்பட்டது.

0 comments:

Post a Comment