Wednesday, November 28, 2012

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு: வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்திற்கு அரசு ஒப்புதல்!

FDI in multi-brand retail 
    புதுடெல்லி:சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை எதிர்த்த போதிலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கவிழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக கசப்பான நிலையில், மத்திய அரசுக்கு ஆதரவான நிலை எடுப்போம் என்று திமுக அறிவித்துள்ள நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தத் தயார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

     டெல்லியில் நேற்று நடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஐ.மு. கூட்டணி கட்சிகள் பிரதமரின் பின்னால் அணி திரண்டுள்ளன.

     சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், சிறு வர்த்தகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்க்கட்சிகளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள சில கட்சிகள் மற்றும் அரசை ஆதரிக்கும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. மக்களவை விதி 184ன் கீழ் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என்று பா.ஜ., கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதை அரசு ஏற்க மறுத்ததால், மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கியதில் இருந்து 4 நாட்களாக நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன.
 
     இந்நிலையில், இந்த பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் மன்மோகன் சிங்,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒரு மணி நேரம் இந்த கூட்டம் நடந்தது.

     அரசு சம்மதம்: கூட்டத்துக்கு பின் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் கூறுகையில், ‘‘ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஒற்றுமையுடன் அரசுக்கு ஆதரவாக உறுதியுடன் உள்ளன. ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் உட்பட எந்த விதியின் கீழும் விவாதம் நடத்த அரசு தயங்கவில்லை. மக்களவை தலைவரும் அரசும் என்ன முடிவு எடுத்தாலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அதை முழுமையாக ஆதரிக்கும். எந்த வகையில் விவாதம் நடத்துவது என்பதை மக்களவை தலைவர் முடிவு செய்ய பெரும்பாலோர் ஆதரவு தெரிவித்தனர். இதை மக்களவை தலைவரை சந்தித்து தெரிவிப்பேன்’’ என்றார்.

     சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக்கின் பிறந்தநாளை முன்னிட்டு பாராளுமன்றத்துக்கு இன்று விடுமுறை. நாளைதான் பாராளுமன்றம் கூடுகிறது. அதன்பிறகு எந்த தேதியில் ஓட்டெடுப்பு நடக்கும் என்று முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

     ஐக்கிய முற்போக்கு கூட்டணி கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ‘‘ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு போதுமான அளவுக்கு எண்ணிக்கை பலம் உள்ளது. இதில் உறுதியான நம்பிக்கையுடன் உள்ளோம்” என்றார்.

    ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சிகளும், கூட்டணியை வெளியில் இருந்து ஆதரிக்கும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளும் அன்னிய முதலீட்டு அனுமதியை எதிர்ப்பதால், அதனை எதிர்க்கொள்ள காங்கிரஸ் கட்சி முயன்று வருகிறது.

    சில்லறை வர்த்தகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சிகளின் ஆதரவை பெறும் ஒரு பகுதியாக பிரதமர் மன்மோகன் சிங் ஏற்கனேவே இக்கட்சிகளின் தலைவர்களுக்கு விருந்து அளித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.  பல்வேறு விவகாரங்களில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக நடந்து கொண்ட இக்கட்சிகள் இந்த விவகாரத்திலும் மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கும் என்றே எதிர் பார்க்கப்படுகிறது. thanks.thoothu

0 comments:

Post a Comment