30 Nov 2012 புதுடெல்லி:தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என டெல்லி மாணவி தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
இது குறித்து ஸ்ரேயா சிங்கல் என்பவர் தனது மனுவில் தெரிவித்துள்ள விவரம்: சமீப காலமாக இணையதளத்தில் கருத்து வெளியிட்டதற்காக சிலர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66ஏ பிரிவு அரசியல் சட்டம் வழங்கும் பேச்சு, கருத்து சுதந்திர உரிமைகளுக்கு எதிராக உள்ளது.
தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66ஏ பிரிவின் கீழ் இணையதளத்தில் தவறுதலான, புண்படுத்தக் கூடிய தகவல்களை வெளியிடுவது குற்றமாகும். தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தாலொழிய இந்தப் பிரிவு தவறாகப் பயன்படுத்தக் கூடிய வாய்ப்புள்ளது.
மேலும் இந்திய குற்றவியல் சட்டத்தின் 41, 156 (1) ஆகிய பிரிவுகளையும் அரசியல் சட்டம் அளிக்கும் பேச்சு, கருத்து சுதந்திரத்துக்கு ஏற்றாற்போல பயன்படுத்த புதிய விதிமுறைகளை நிர்ணயிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
குற்றவியல் சட்டத்தின் 41-வது பிரிவின் கீழ், ஒரு குற்றத்துக்காக மாஜிஸ்திரேட் உத்தரவில்லாமல், வாரண்ட் எதுவும் இல்லாமல் போலீஸார் ஒருவரைக் கைது செய்ய இயலும். 156 (1) பிரிவின்படி, மாஜிஸ்திரேட் உத்தரவில்லாமல் போலீஸார் விசாரணை மேற்கொள்ளலாம்.
சமீபத்தில் சிவசேனை தலைவர் பால் தாக்கரே மறைவைத் தொடர்ந்து மும்பையில் நடைபெற்ற இரண்டு நாள் முழு அடைப்பு குறித்து ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்த இரு பெண்கள் கைது செய்யப்பட்ட நடவடிக்கை பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து இணையதளத்தில் கார்ட்டூன்களை வெளியிட்டவர் கைது செய்யப்பட்டது சர்ச்சைக்குள்ளானது. thanks, thoothu
0 comments:
Post a Comment