Wednesday, November 21, 2012

கூடங்குளம்:மக்கள் பாதுகாப்பு விவகாரத்தில் சமரசம் இல்லை – உச்சநீதிமன்றம்!

Don't compromise people's safety in Kudankulam -  SC
      புதுடெல்லி:கூடங்குளம் அணு உலை தொடர்பான வழக்கில்,  “அணு மின் திட்ட விவகாரத்தில் மக்களின் பாதுகாப்பே முக்கியம்; அதில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

     கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு எதிராக ‘பூவுலகின் நண்பர்கள்’ என்ற பொதுநல அமைப்பைச் சேர்ந்த ஜி. சுந்தர்ராஜன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் நாட்டில் உள்ள அணு உலைப் பாதுகாப்பை உறுதிப்படுத்த எடுத்துள்ள நடவடிக்கை, கூடங்குளத்தில் பின்பற்றப்படும் பாதுகாப்பு நெறிகள் தொடர்பான அறிக்கையை மத்திய அரசு ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. அவை குறித்த வாதத்தையும் மத்திய அரசு முன்வைத்திருந்தது.

     இந்நிலையில், நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

     அப்போது சுந்தர்ராஜனின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் முன்வைத்த வாதம்:

     “ஜப்பானின் ஃபுகுஷிமா அணுஉலை விபத்துக்குப் பிறகு இந்தியாவில் உள்ள அணு உலைகளைப் பாதுகாப்பது குறித்து ஆய்வு செய்ய இந்திய அணுசக்தி ஆணையம் ஒரு குழுவை நியமித்தது. கூடங்குளம் அணு மின் நிலையத்தைப் பாதுகாக்க 17 பரிந்துரைகளை அந்தக் குழு அளித்தது. அதில் ஆறு பரிந்துரைகள் மட்டுமே கடைப்பிடிக்கப்பட்டுள்ளன. ‘மீதமுள்ள 11 பரிந்துரைகளை அணு உலை உற்பத்தி செயல்படத் தொடங்கும் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவேற்றுவோ’ம் என மத்திய அரசு கூறுகிறது.

      இடைப்பட்ட காலத்தில் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அதனால் ஏற்படப் போகும் பாதிப்புகளை எதிர்கொள்ள செய்ய மத்திய, மாநில அரசுகள் தயாராக உள்ளனவா? பேரிடர் காலங்களில் எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்? கூடங்குளம் அணு உலையைச் சுற்றி சுமார் 40 கிராமங்கள் உள்ளன. அவற்றில் சுமார் மூன்று லட்சம் பேர் வசிக்கின்றனர். அணு உலை விபத்துக்குள்ளானால் அந்த கிராமவாசிகளை உடனே அப்புறப்படுத்தவும் அவர்களுக்கு மறுவாழ்வு, நிவாரண உதவிகளை வழங்கவும் மாநில அரசிடம் என்ன திட்டங்கள் உள்ளன? விபத்துக் கால பேரிடர் மேலாண்மை பற்றிய விழிப்போ பயிற்சியோ அணு உலையைச் சுற்றியுள்ள மக்களுக்கு வழங்கப்படவில்லை.

    கூடங்குளம் அணு மின் திட்டப் பாதுகாப்பை, சர்வதேச அளவில் கடைப்பிடிக்கப்படும் விதிகளின்படி மேற்கொண்டுள்ளதாக மத்திய அரசு
கூறுகிறது. அதன்படி அணு உலையைச் சுற்றி 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்பட்ட இடங்களில் வசிக்கும் மக்களுக்குப் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். ஆனால், இந்திய அணு சக்திக் குழு அளித்த பரிந்துரையில் 16 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வசிப்போருக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அந்தப் பரிந்துரையும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

    அணு விபத்தை எதிர்கொள்ள அணு மின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பேரிடர் தற்காப்பு ஒத்திகை கூட முழுமையாக நடத்தப்படவில்லை” என்று பிரசாந்த் பூஷண் வாதிட்டார். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜராயிருந்த மத்திய அரசு வழக்குரைஞர் மோகன் பராசரனிடம் நீதிபதிகள், “அணு மின் திட்ட விவகாரத்தில் மக்களின் பாதுகாப்பே முக்கியம்; அதில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்றனர்.

    அதைத் தொடர்ந்து தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் குரு கிருஷ்ணகுமார்,  “கூடங்குளம் திட்டம் தொடர்பாக அணு உலையைச் சுற்றியுள்ள இரண்டு கிராமங்களில் விழிப்புப் பிரசாரமும் பேரிடர் பாதுகாப்பு ஒத்திகையும் நடத்தப்பட்டுள்ளன” என்றார்.

    இந்தப் பதிலால் திருப்தியடையாத நீதிபதிகள் தமிழக அரசுக்குப் பிறப்பித்த உத்தரவு:

     கூடங்குளம் அணு உலைப் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளும்படி கடந்த ஆகஸ்டில் மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் மீது மத்திய அரசு அறிக்கை அளித்துள்ளது.

    மாநில அரசு சார்பில் அணு உலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் எத்தகைய தற்காப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

    பாதிக்கப்படும் மக்களுக்குப் பேரிடர் மேலாண்மையின் கீழ் மறுவாழ்வு, நிவாரணம் வழங்க என்ன திட்டங்கள் உள்ளன?

    அவசர கால ஒத்திகையும் விழிப்புப் பிரசாரமும் எந்த அளவுக்கு நடத்தப்பட்டுள்ளன?

    இவற்றை விளக்கி எழுத்துப் பூர்வமாக தமிழக அரசு அறிக்கை அளிக்க வேண்டும்.இந்த வழக்கு புதன்கிழமைக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. அப்போது, பிரசாந்த் பூஷண் தமது வாதத்தைத் தொடர அனுமதியளிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். நன்றி, thoothu
   

0 comments:

Post a Comment