Wednesday, November 7, 2012

இன்று (நவ. 07) துவங்கும் ஷார்ஜா புத்தகக் கண்காட்சி 2012: ஹால் எண் 5, ஸ்டால் எண் N2-ல் இலக்கியச்சோலை தமிழ் நூல்கள்!


Bookfair

ஷார்ஜா:நவம்பர் 07 முதல் 17 வரை நடைபெறவிருக்கும் 2012ம் ஆண்டிற்கான 31வது ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் ஹால் எண் 5, ஸ்டால் எண் N2-ல் மலையாளப் பதிப்பகமான தேஜஸ் பப்ளிகேஷன்ஸ் இடம் பெறுகிறது. தேஜஸ் பப்ளிகேஷன்ஸ் ஸ்டாலில் இலக்கியச்சோலை தமிழ் நூல்கள் இடம் பெறுகின்றன.
இலங்கை எழுத்தாளர் லறீனா அப்துல் ஹக் எழுதிய “வார்த்தைகளின் வலி தெரியாமல்”, நெ. முஹம்மத் எழுதிய “இடஒதுக்கீடும் முஸ்லிம்களும் – ஒரு வரலாற்றுப் பார்வை”, நாவலர் ஏ.எம். யூசுஃப் எழுதிய “மறைவழி கண்ட மாமன்னர் சேரமான் பெருமாள்” (புதுயுகம் வெளியீடு), “பாட்லா ஹவுஸ் என்கவுண்டர்”, “இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்”, “மனித இனத்திற்கெதிரான குற்றம்” உட்பட இன்னும் பல நூல்கள் அங்கே விற்பனைக்குக் கிடைக்கும்.
அமீரகத் தமிழ் பேசும் நல்லுள்ளங்கள் இலக்கியச்சோலை நூல்களை வாங்கிப் பயனடையுமாறு இலக்கியச்சோலை காப்பாளர் முஹம்மத் இஸ்மாயீல் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தப் புத்தகக் கண்காட்சியில் 62 நாடுகளிலிருந்து 924 நூல் வெளியீட்டு நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. 40 அரபு நாடுகளிலிருந்தும், 22 வெளிநாடுகளிலிருந்தும் மொத்தம் 924 பதிப்பகத்தார்கள் இந்தக் கண்காட்சியில் கலந்து கொள்கின்றனர். இதில் 24 நாடுகள் முதன் முறையாகப் பங்கேற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வருடம் பாகிஸ்தான் மையப்படுத்தப்படுகின்றது. பாகிஸ்தானிலிருந்து மொத்தம் 23 வெளியீட்டு நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இதில் 20 பாகிஸ்தான் பதிப்பகத்தார் முதன் முறையாகக் கலந்துகொள்கின்றனர்.
வெறும் கண்காட்சியுடன் நிற்காமல் தினமும் இலக்கியக் கூட்டங்கள், கலைநிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் போன்றவை சென்ற வருடத்தைப் போலவே இந்த வருடமும் தினமும் நடைபெறவுள்ளன. இக்கூட்டங்களில் எகிப்து கலாசார அமைச்சர் முஹம்மத் ஸபீர் அரப், அல்ஜீரியாவின் பிரபல நாவலாசிரியர் அஹ்லாம் முஸ்தகன்மி, எகிப்தின் பிரபல நகைச்சுவையாளர் ஆதில் இமாம், பிரபல நடிகர் யஹ்யா அல் ஃபக்ரானி உட்பட பல அரபு பிரபலங்களும், எழுத்தாளர்களும் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். இந்நிகழ்ச்சிகள் செலிபரேஷன்ஸ் ஹால், புக் ஃபோரம், லிட்டரரி ஃபோரம், கல்ச்சுரல் ஹால், தாட் ஹால் ஆகிய இடங்களில் நடைபெறும்.
பாகிஸ்தானின் பிரபல எழுத்தாளர் வாஸி ஷாஹ் உட்பட பலர் இக்கூட்டங்களில் பங்கெடுக்கின்றனர். இந்தியாவைச் சார்ந்த பிரபல மனித உரிமை ஆர்வலரும், எழுத்தாளருமான அருந்ததி ராய், வில்லியம் டால்ரிம்பிள் உட்பட பல எழுத்தாளர்கள் கலந்துகொள்கின்றனர். அத்தோடு இந்திய நடிகர்கள் அனுபம் கெர், தீப்தி நாவல், பங்கஜ் மிஷ்ரா, ஹெச்.எம். நக்வி, பால் ஸகரியா, வித்யா ஷாஹ் உட்பட பலர் இக்கண்காட்சியில் கலந்துகொள்கின்றனர்.
எழுத்தாளர் அருந்ததி ராயின் புகழ் பெற்ற நூலான ‘The God of Small Things’ என்ற நூலைக் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நவம்பர் 9ம் தேதி காலை 8.30 மணிக்கு நடைபெறும். இதில் எழுத்தாளர் அருந்ததி ராய் கலந்துகொள்கிறார் என்று பிரபல மலையாளப் பதிப்பகமான டிசி புக்ஸ்-ன் தலைமை நிர்வாகி ரவி கூறினார்.
இந்த 11 நாள் கண்காட்சி உலகிலேயே ஆறாவது மிகப் பெரிய இலக்கியத் திருவிழா என்றும், இக்கண்காட்சியின் முக்கிய நோக்கமே இளைய தலைமுறைக்கு வாசிக்கும் பழக்கத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்துவதுதான் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர். மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் கண்காட்சியின் அனைத்து நாட்களிலும் தினமும் காலை 10.30 மணிக்கு நடைபெறும்.

0 comments:

Post a Comment