Sunday, November 11, 2012

அசாருதீன் மீதான ஆயுட்கால தடை:சட்டவிரோதம்! – நீதிமன்றம்!

Cricket- Azharuddin life ban overruled

ஹைதராபாத்:இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முஹம்மது அஸாருதீன் மீதான ஆயுள் தடையை நீக்கி ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அசாருதீனுக்கு 2000ஆம் ஆண்டில் ஆயுள்கால தடை விதித்தது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ). அதை எதிர்த்து அவர் சிவில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிமன்றம், பிசிசிஐயின் முடிவு சரியானது என்று தீர்ப்புக் கூறவே, உயர் நீதிமன்றத்தை நாடினார் அசாருதீன். கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பு வெளியாகியுள்ளது.
நீதிபதிகள் அஷுதோஷ் மொஹந்தா, கிருஷ்ணா மோகன் ரெட்டி ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது அசாருதீன் சார்பில் ஆஜரான அவருடைய வழக்குரைஞர் ராமாகாந்த் ரெட்டி, “அசாருதீன் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை’ என்று வாதிட்டார். அதைக் கேட்ட நீதிபதிகள், அவர் மீதான தடையை நீக்கி
உத்தரவிட்டனர்.
தீர்ப்பில் நீதிபதிகள் கூறியது: இந்திய கிரிக்கெட் வாரியம் அசாருதீனுக்கு ஆயுள் கால தடை விதித்தது சடவிரோதமானது.சட்டப்படி போதிய ஆதாரம் இல்லாமல் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தடையை இந்திய கிரிக்கெட் வாரியம் நீக்க இதுவே சரியான தருணம். இதுக் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் உடனடியாக பரிசீலனைச் செய்யவேண்டும்” என்று கூறியுள்ளனர்.
நீதிமன்ற தீர்ப்பால் மகிழ்ச்சியடைந்துள்ள அசாருதீன், இது தொடர்பாக கூறியதாவது: இந்த விவகாரத்தால் கடந்த 12 ஆண்டுகளாக வேதனையை அனுபவித்திருக்கிறேன். நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க நீதிமன்றத்தில் 11 ஆண்டுகள் போராடியிருக்கிறேன்.
இந்த வழக்கு பல முறை ஒத்திவைக்கப்பட்டதோடு, பல்வேறு மாற்றங்களையும் சந்தித்திருக்கிறது. எனினும் இப்போது என் மீதான தடை நீக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
பிசிசிஐக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப் போகிறீர்களா என்று கேட்டபோது, “பிசிசிஐக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப் போவதில்லை. இந்த விஷயத்தில் யார் மீதும் குறைகூற விரும்பவில்லை. இது என்
தலைவிதி. என்ன நடந்ததோ, அது நடந்ததுதான். கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக பிசிசிஐயுடன் இணைந்து செயல்பட விரும்புகிறேன். ஆனால் இதற்கு பிசிசிஐயின் பதில் என்னவா இருக்கும் என்று என்னால் கணிக்க முடியவில்லை. கிரிக்கெட்டும், கிரிக்கெட் வீரர்களும் பயனடையும் வகையில் பணிபுரிய தயாராக இருக்கிறேன்’ என்றார்.
உங்களுக்கு ஆயுள்தடை விதித்தது சட்டத்துக்குப் புறம்பானதுதானே என்று கேட்டபோது, “அதனால்தான் இப்போது தடை நீக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் இதற்குமேல் எதையும் கூற விரும்பவில்லை. எனது மனசாட்சிப்படி நான் தவறு
செய்யவில்லை. அதனாலேயே தடை விதிக்கப்பட்டபோது நான் வேதனையடைந்தேன். இப்போது தடை நீக்கப்பட்டிருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தடை விவகாரத்தை மறக்க விரும்புகிறேன் என்றார்.
சூதாட்ட விவகாரத்தில் தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் ஹான்ஸி குரோன்யேவின் நிலை குறித்து கேட்டபோது, “அவர் இப்போது உயிரோடு இல்லை. அதனால் அது தொடர்பாக இப்போது பேசுவது சரியாக இருக்காது’ என்றார் அசாருதீன்.

0 comments:

Post a Comment