Saturday, November 24, 2012

சொஹ்ரபுத்தீன் ஷேக் வழக்கு: ஒன்பது குற்றவாளிகள் மும்பைக்கு மாற்றம்!

 Sohrabuddin Sheikh encounter case-Nine accused sent to Mumbai
    அஹ்மதபாத்:சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஒன்பது பேர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்று மும்பை நீதிமன்றத்தில்
    ஆஜர்படுத்தப்படுவர். பின்னர் மும்பையில் ஏதேனும் ஒரு சிறையில் அடைக்கப்படுவார்கள். சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகளான டி.ஜி.வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன், தினேஷ் எம்.என் ஆகியோர் உள்ளிட்டவர்கள் மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

    சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கின் விசாரணையை மஹராஷ்ட்ரா மாநிலத்துக்கு மாற்றவேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்களை மும்பைக்கு மாற்றுவது தொடர்பான பிரச்சனை இத்துடன் முடிவுக்கு வந்துள்ளது.

    இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அபய் சுதசாமா, என்.கே.அமீன் ஆகியோர் உடல் நிலை காரணமாக மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இதனால் அவர்கள் இதர நபர்களுடன் ஆஜர்படுத்தப்படவில்லை. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சுதசாமா, நதியாட் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமீன் வதேதரா மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன், குற்றம் சாட்டப்பட்டோர் சிறப்பு வாகனங்களில் மும்பைக்கு கொண்டுவரப்பட்டனர்.
சாட்சிகள் மிரட்டப்படுவதாகவும், சுதந்திரமான, நீதியான விசாரணை குஜராத்தில் சாத்தியமில்லை என்று சி.பி.ஐ உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.

     இதனைத் தொடந்து கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கு மஹராஷ்ட்ரா மாநிலத்துக்கு மாற்றப்பட்டது.

     சொஹ்ரபுத்தீன் ஷேக் மற்றும் அவரது மனைவி கெளஸர் பீயை குஜராத் மாநில தீவிரவாத தடுப்பு படை ஆந்திரபிரதேச மாநிலத்தில் இருந்து கடத்திச் சென்றது. 2005 நவம்பர் 26-ஆம் தேதி போலி என்கவுண்டர் வழக்கில் சொஹ்ரபுத்தீன் ஷேக் கொல்லப்பட்டார். அவரது மனைவி எரித்துக் கொலைச் செய்யப்பட்டார்.

     கடந்த ஒன்பதாம் தேதி குற்றம் சாட்டப்பட்டவர்களை ஆஜர்படுத்த மும்பை சிறப்பு நீதிமன்றம் சபர்மதி சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், அன்றைய தினம் ஆஜர்படுத்த முடியாததால் இன்று அவர்கள் ஆஜர்படுத்தப்படுகின்றனர். நன்றி, தூது

0 comments:

Post a Comment