Thursday, October 28, 2010

மலேசியாவின் இஸ்லாமிய வங்கி செயல்பாடு : இந்தியாவில் செயல்படுத்த பிரதமர் ஆவல்


கோலாலம்பூர் : மலேசிய அரசின் இஸ்லாமிய வங்கி செயல்படுவதை போன்று, இந்தியாவில் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தி பார்க்கும்படி, ரிசர்வ் வங்கியை பிரதமர் மன்மோகன் சிங் கேட்டு கொண்டுள்ளார்.
மலேசியாவில் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், நேற்று அந்நாட்டு பிரதமர் முகமது நஜிப் டுன் அப்துல் ரஜாக்கை சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் பயனாக, இரு நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவானது. பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் வர்த்தகத்தை பெருக்கி கொள்ளும் வகையில், ஒருங்கிணைந்த பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்து கொள்ள பேச்சு வார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் 2011ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி கையெழுத்தாகிறது. இதன் பின் ஆறு மாதத்தில் இது நடைமுறைக்கு வருகிறது. பெட்ரோலியம், மரபு சாரா எரிசக்தி, வங்கிகள், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்தி கொள்வதென, முடிவு செய்யப்பட்டது.
பேச்சுவார்த்தைக்கு பின் நிருபர்களை சந்தித்த மலேசிய பிரதமர் ரஜாக் நிருபர்களிடம் கூறுகையில், "பிரதமர் மன்மோகன் சிங்குடன் நடத்திய பேச்சுவார்த்தையின் மூலம் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவாகியுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் இரட்டிப்பாகும். மலேசியா தற்போது இந்தியாவுடன் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்து வருகிறது. தடையற்ற ஒருங்கிணைந்த வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதும், 2015ம் ஆண்டில் வர்த்தகத்தின் அளவு 70 ஆயிரம் கோடி ரூபாயாகும்' என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
பிரதமர் மன்மோகன்சிங் நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய - மலேசிய உறவில் இன்று திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் இருநாடுகளும் ஒத்துழைப்பை பெருக்கி கொள்ளும் வகையில், ரஜாக்குடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்தது. மலேசியாவில் கட்டுமானம் மற்றும் தயாரிப்பு துறைகளில் இந்திய கம்பெனிகள் பெரும் முதலீடுகளை செய்யவும், மலேசியாவில் வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்வதையும் வரவேற்கிறேன். பொருளாதார வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் இரு நாடுகளும் கைகோர்த்து கொண்டு பயணிக்க இருக்கிறது.
மலேசிய அரசு நடத்தி வரும் இஸ்லாமிய வங்கி செயல்படும் முறையை போன்று, இந்தியாவிலும் நடைமுறைபடுத்த வேண்டும் என கூறி வருகின்றனர். இது பற்றி ஆராயுமாறு மத்திய ரிசர்வ் வங்கியை கேட்டுக் கொண்டுள்ளேன். மிகப்பிரமாண்ட முறையிலான இந்த வங்கியின் செயல்பாடு என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. மலேசிய தொழில் அதிபர்கள் இந்தியாவில் தொழில் துவக்க முன்வர வேண்டும். அன்னிய நேரடி முதலீடு நடைமுறைகளை மிகவும் எளிமைப்படுத்தியுள்ளோம். 
குறிப்பாக கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ள மலேசிய கம்பெனிகளுக்கு நீண்ட காலத்திற்கு தங்கள் முதலீட்டை ஏற்படுத்தி கொள்வதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது. கட்டுமான பணிகள் மேம்பாட்டுக்காக நாங்கள் விரிவான திட்டங்களை வகுத்துள்ளோம். இதில், மலேசிய கம்பெனிகளும் பங்கேற்கும் போது, ஒரு உறுதியான வளர்ச்சியை காண்பதோடு, கட்டுமானத் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்க முடியும். குறிப்பாக, டில்லி மற்றும் ஐதராபாத்தில், இந்தியாவை சேர்ந்த நிறுவனத்துடன் சேர்ந்து, மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங் நிறுவனம் இணைந்து உருவாக்கிய விமான நிலையங்கள் சிறப்பான முறையில் உள்ளன. இதுவே ஒரு உதாரணம்.
சீனாவுடன் ஒருங்கிணைந்து செயல்பட நாங்கள் விரும்புகிறோம். சீனாவுடன் நடந்து வரும் வர்த்தக பேச்சு வார்த்தை நல்ல பலனை கொடுக்கும். இந்தியாவும் சீனாவும் உலகளவில் பொருளாதாரத்தில் வேகமான வளர்ச்சியை கண்டு வருகிறது. சீனா இந்தியாவுடன் மிகப் பெரியளவில் வர்த்தக உறவை கொண்டுள்ளது. இருநாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம், உலகளவில் பெரும் சக்தியாக விளங்க முடியும். இவ்வாறு பிரதமர் கூறினார்.

0 comments:

Post a Comment