Wednesday, October 27, 2010

இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்-சுனாமி தாக்கியது

ஜகார்தா: இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடு்க்கத்தையடுத்து சுமத்ரா தீவுக்கு அருகே உள்ள மென்டாவி தீவுப் பகுதியை சுனாமி அலைகள் தாக்கின. இதில் பல வீடுகள் தரைமட்டமாகியுள்ள. பலரைக் காணவில்லை. அவர்களது கதி என்ன ஆனது என்று தெரியவில்லை.

இந்தோனேஷியாவின் மேற்குப் பகுதியில் உள்ள மென்டாவி தீவுக்கு அருகே கடலில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு 2.42 மணிக்கு (அந் நாட்டு நேரப்படி நேற்றிரவு 9.42 மணிக்கு) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

கடலுக்கடியில் 20.6 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.7 புள்ளிகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் ஏற்பட்டு சில கடலோர கிராமங்களுக்கு நீர் புகுந்துள்ளது. பல வீடுகள் தரைமட்டமாகியுள்ளன.

கடும் நிலநடுக்கம் ஏற்பட்டவுடனேயே சுனாமி அலைகள் உருவாகும் என்ற அச்சத்தில் பெரும்பாலான மக்கள் முன் கூட்டியே கடலோரப் பகுதிகளை விட்டு ஓடிவிட்டனர். இதனால் அலைகள் தாக்கியபோது பெரிய அளவில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிகிறது.

இருப்பினும் மென்டாவி தீவின் மக்கரோனி பே என்ற இடத்தில் சில வீடுகளும் மக்களும் கடலுக்குள் இழுத்து்ச் செல்லப்பட்டுவிட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வருகின்றன.

அதே போல கடலில் 9 ஆஸ்திரேலியர்கள் சென்ற இரு படகுகள் சுனாமி அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு ஒன்றுடன் ஒன்று மோதின. இதில் ஒரு படகு வெடித்துச் சிதறியுள்ளது. இதையடுத்து இதிலிருந்த சிலரைக் காணவில்லை.

அதே நேரத்தில் இனியும் சுனாமி அலைகள் உருவாக வாய்ப்பில்லை என்பதால் அந்த எச்சரிக்கை இன்று காலை வாபஸ் பெறப்பட்டுவிட்டது.

கடல் காற்று அதிகம் நிலவும் மென்டாவி தீவு சர்பிங் செய்வதற்கு மிக ஏற்க கடற்கரை என்பதால், இங்கு வெளிநாட்டுப் பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

2004ம் ஆண்டு இந்தோனேஷியாவை சுனாமி அலைகள் தாக்கியதில் 1.68 லட்சம் மக்கள் பலியானது நினைவுகூறத்தக்கது.

0 comments:

Post a Comment