28 Nov 2012
லக்னோ:தனியார் தொலைக்காட்சி சானல் ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கெளரவக் கொலையை குறித்து பேசிய இளைஞர் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டுள்ளார். மேற்கு உத்தரபிரதேசத்தில் அப்துல் ஹக்கீம்(வயது29) என்பவர்தாம் கொல்லப்பட்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் அமீர்கான் தனியார் தொலைக்காட்சி சானல் ஒன்றில் சத்யமேவ ஜயதே என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். சமூக நிகழ்வுகளை ஆராயும் இந்நிகழ்ச்சியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அப்துல் ஹக்கீமும், அவரது மனைவி மெஹ்விஷும் கலந்துகொண்டு குடும்பத்தினரின் விருப்பமில்லாமல் திருமணம் செய்த தங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மாறுபட்ட சமூக சூழல்களைச் சார்ந்த குடும்பத்தில் பிறந்த அப்துல் ஹக்கீமும், மெஹ்விஷும் திருமணமான பிறகு தன்னார்வ தொண்டர்களின் பாதுகாப்பில் டெல்லியில் வசித்து வந்தார்கள். தற்போது எட்டு மாதம் கர்ப்பிணியாக உள்ளார் மெஹ்விஷ். வியாழக்கிழமை கணவர் கொல்லப்பட்டாலும், ஞாயிற்றுக்கிழமை மெஹ்விஷ் இச்சம்பத்தை ஊடகங்களுக்கு தெரிவித்த பிறகே வெளியுலகிற்கு தெரியவந்தது. கொலைக்கு பின்னால் தனது குடும்பத்தினர் இருப்பதாக மெஹ்விஷ் குற்றம் சாட்டினார். இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளி என கருதப்படுபவர் தலைமறைவாகி உள்ளார்.
உ.பி மாநிலம் புலந்த்ஷஹ்ர் மாவட்டத்தில் அதோலியில் உடல் சுகவீனமின்றி இருக்கும் தாயாரை பார்க்க அப்துல் ஹக்கீமும், மெஹ்விஷும், ஒன்றரை வயது மகளும் 2 வாரத்திற்கு முன்பு சென்றனர். தனது மனைவியை டாக்டரிடம் காண்பிக்க அழைத்துச் சென்ற வேளையில் அப்துல் ஹக்கீம் சுடப்பட்டார்.
அண்டை வீட்டார்களான இருவரும், பல ஆண்டுகள் காதலித்து கடந்த2009 ஜூன் மாதம் திருமணம் புரிந்தனர். ஏழைக் குடும்பத்தைச் சார்ந்த அப்துல் ஹக்கீமை, நிலச்சுவான் தாரர்களான மெஹ்விஷின் குடும்பத்தினர் எதிர்த்தனர்.
தொலைக்காட்சி சானல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தம்பதியினர் பீதி வயப்பட்டதாக அமீர் கான் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பங்கேற்க நாங்கள் யாரையும் நிர்பந்திக்கவில்லை. இச்சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று அமீர்கான் கூறினார்.
குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அவர் உ.பி அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
இச்சம்பவம் குறித்து மெஹ்விஷ் கூறுகையில், “எனது குடும்பத்தினர் எங்களை கொலைச் செய்யப் போவதாக மிரட்டல் விடுத்திருந்தனர். போலீஸ் பாதுகாப்பு அளித்திருந்தால் இச்சம்பவம் நடந்திருக்காது. சம்பவத்திற்கு பிறகு போலீஸ் ஒத்துழைக்கவில்லை. ஐந்து பேர் மீது புகார் அளித்த பிறகும் தாயாரின் சகோதரரை மட்டுமே போலீஸ் கைது செய்துள்ளது. தற்போது அவர்கள் என்னையும், எனது குழந்தையையும் குறிவைத்துள்ளனர்” என்று மெஹ்விஷ் கூறியுள்ளார்.
இதனிடையே புலந்த் ஷஹ்ரில் அப்துல் ஹக்கீம் என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மாநில அரசிடம் மத்திய அரசு முழுமையான அறிக்கையை கேட்டுள்ளது. நாட்டில் கெளரவக் கொலைகள் அதிகரித்து வரும் வேளையில் இத்தகைய சம்பவங்கள் தொடராமலிருக்க சட்டம் இயற்றுவது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்படும் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் கூறினார். நன்றி, தூது
0 comments:
Post a Comment