26 Nov 2012
புதுடெல்லி:இந்திய உளவுத் துறை ஏஜன்சிகளான ஐ.பி(இண்டலிஜன்ஸ் பீரோ), ரா(ரிசர்ச் அண்ட் அனலிசிஸ் விங்) ஆகியவற்றைக் கட்டுப்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் இத்தகைய பொதுநல மனு தாக்கல் செய்யப்படுவது முதல் தடவையாகும்.
புலனாய்வு ஏஜன்சிகளை அரசு துஷ்பிரயோகம் செய்யவில்லை என்பதை உறுதிச் செய்ய அவற்றை பாராளுமன்றம் நிறைவேற்றும் சட்டத்தின் கீழ் கொண்டுவரவேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எவ்வித சட்ட அனுமதியும் இன்றி உளவுத்துறை ஏஜன்சிகள் இயங்குகின்றன. அது அரசியல் சாசனத்தின் 21-ஆம் பிரிவுக்கு எதிரானதாகும்.
மத்திய இண்டலிஜன்ஸ் பீரோ பாராளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்தின் கீழ் தான் உருவாக்கப்படவேண்டும் என்று அரசியல் சாசனத்தின் ஏழாவது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சி.ஐ.ஏவும், என்.எஸ்.ஏவும் பாராளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்தின் கீழ் தாம் உருவாக்கப்பட்டன. பிரிட்டனிலும் இத்தகைய சட்டம் அமலில் உள்ளது. உளவுத்துறை ஏஜன்சிகள் செலவழிக்கும் பணம், சி.ஏ.ஜி யின் தணிக்கையில் இடம்பெறுவதில்லை என்றும் பிரசாந்த் பூஷண் தனது மனுவில் கூறியுள்ளார். நன்றி, தூது
0 comments:
Post a Comment