Friday, November 30, 2012

முகமது நபியை இழிவுபடுத்தி படம் எடுத்த ஏழு நபர்களுக்கு தூக்கு

     கெய்ரோ : முஸ்லீம்களின் இறுதி தூதரான முஹம்மது நபியை இழிவுபடுத்தும் வகையில், 'இன்னோசன்ஸ் ஆப் முஸ்லீம்ஸ்' என ஓர் திரைப்படம் இணையதளத்தில் வெளியிடப்பட்டதும், அதை எதிர்த்து சென்னை உட்பட, உலகெங்கும் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றதும் அறிந்ததே.

    இப்படத்தை எடுத்த ஏழு பேர் மீதும் எகிப்தில் வழக்கு தொடரப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஏழு நபர்களும் எகிப்திற்கு வெளியே உள்ள நிலையில் இவ்வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சைப் அல் நஸ்ர் “ இஸ்லாம் மற்றும் அதன் தூதரை அவமானப்படுத்தும் வகையில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரும் படம் எடுத்துள்ளனர் என்பது உறுதியாகிறது” என்று தீர்ப்பளித்துள்ளார்.

    இப்படிப்பட்ட மோசமான படத்தை எடுத்து, இஸ்லாம் மார்க்கத்தையும் அதன் தூதரையும் இழிவுபடுத்தியதற்காக எகிப்து நாட்டைப் பொறுத்து தலைமறைவாக இருக்கும் ஏழு பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.

    இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் வசிக்கும் எகிப்திய கிறித்தவர்கள் என்பதும், ஏழு நபர்களில் ஒருவரான நகோலா பஸிலி தற்போழுது லாஸ் ஏஞ்சல்ஸில் தண்டனை அனுபவித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தண்டனை குறித்து எவ்வித கருத்தையும் அதிகாரபூர்வமாக தெரிவிக்க எகிப்தின் 'காப்டிக் ஆர்த்தோடெக்ஸ்' தேவாலயம் மறுத்து விட்டது.

    இது குறித்து கருத்து தெரிவித்த தேவாலய அதிகாரி ஒருவர், இப்படம் குறித்து ஏற்கனவே தேவாலயம் தன் கண்டனத்தை தெரிவித்துள்ளது என்றும் பொதுவாக நீதிமன்றங்களின் தீர்ப்பு குறித்து தேவாலயம் கருத்து எதுவும் தெரிவிக்காது என்றும் கூறினார். thanks, Inneram

0 comments:

Post a Comment