29 Nov 2012
டமாஸ்கஸ்:சிரியாவின் தலைநகரமான டமாஸ்கஸின் தென்கிழக்குப் பகுதியில் நிகழ்ந்த இரட்டை கார் குண்டுவெடிப்பில் 54 பேர் பலியாகியுள்ளனர். 83 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. குண்டுவெடிப்பில் ஏராளமான வாகனங்களும், கட்டிடங்களும் சேதமடைந்துள்ள காட்சியை சிரியா ஊடகங்கள் ஒளிபரப்புச் செய்தன.
சிரியாவின் ஜரமனா மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் இக்குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. அரசுப் படையினருக்கும், எதிர்ப்பு ராணுவத்தினருக்கும் இடையே ஏற்கனவே இங்கு கடுமையான மோதல் நிகழ்ந்துள்ளது. ஜரமனா மாவட்டத்தின் இன்னொரு பகுதியிலும் இரட்டைக் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தபோதும் உயிர் சேதம் குறித்து தகவல் இல்லை.
இச்சம்பவத்தின் பின்னணியில் அரசுப் படையினரா அல்லது எதிர்ப்பு ராணுவமா? என்பதுக் குறித்து தகவல் இல்லை. மேலும் இத்தாக்குதல் அரசு ராணுவம் அல்லது அரசு மையங்களை குறிவைத்து நடத்தப்பட்டதா? என்பது குறித்தும் தெளிவு இல்லை. அதேவேளையில் இக்குண்டுவெடிப்பின் பின்னணியில் தேச விரோத சக்திகள் இருப்பதாக அரசு கூறுகிறது.
இதனிடையே அரசு ஹெலிகாப்டர் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக எதிர்ப்பு ராணுவம் கூறுகிறது. வடமேற்கு சிரியாவில் உள்ள தங்களது தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்த வந்த ராணுவ ஹெலிகாப்டரை ஏவுகணையை உபயோகித்து சுட்டு வீழ்த்தியதாக எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். வீழ்த்தப்பட்ட சிரியா அரசு ராணுவ ஹெலிகாப்டருக்கு அருகில் எதிர்ப்பாளர்கள் மகிழ்ச்சியில் கூச்சலிடும் காட்சி யூ ட்யூபில் இடம் பெற்றுள்ளது.
சிரியாவில் முதன் முதலாக அரசு படையின் ராணுவத்தை எதிர்ப்பு படையினர் வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. நன்றி, தூது
0 comments:
Post a Comment