24 Nov 2012
காஸ்ஸா:போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகும் இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார்.10 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 21 வயதான அப்துல் ஹாதி எல்லையை ஒட்டியிருக்கும் தனது விவசாய நிலத்தை பார்ப்பதற்காக சென்ற வேளையில் இஸ்ரேல் ராணுவம் சுட்டு கொன்றுள்ளது.
எல்லையை ஒட்டிய விவசாய நிலத்தில் ஃபலஸ்தீனர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. காயமடைந்த அனைவரும் விவசாய வேலைகளுக்காக சென்றவர்கள் என்று காஸ்ஸா எமர்ஜென்ஸி சர்வீஸ் செய்தி தொடர்பாளர் அத்ஹம் அபூ ஸல்மியா கூறுகிறார். தலையில் குண்டு பாய்ந்து அப்துல் ஹாதி மரணமடைந்துள்ளார்.
இஸ்ஸத்தின் அல் கஸ்ஸாமின் கமாண்டர் அஹ்மத் ஜஃபரியை கொலை செய்ததைத் தொடர்ந்து உருவான மோதலில் இஸ்ரேல் தாக்குதலில் 160 ஃபலஸ்தீன் மக்களும், ஃபலஸ்தீன் போராளிகளின் தாக்குதலில் 5 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர். 1200 பேருக்கு காயம் ஏற்பட்டது.
எகிப்தின் அதிபர் முஹம்மது முர்ஸி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் போர் நிறுத்த உடன் பாடு ஏற்பட்டது. ஆனால், அதனை மீறும் வகையில் இஸ்ரேல் அடாவடி தாக்குதலை நடத்தியுள்ளது. இது தெளிவான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர்.
ஃபலஸ்தீன் விவசாயி ஒருவரை கொலை செய்த சம்பவத்தை இஸ்ரேல் இதுவரை உறுதி செய்யவில்லை. இச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக கூறியுள்ளது. அதே வேளையில், இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை தயார் செய்ய தலைமை வகித்த எகிப்து அதிகாரிகளுடன் இதுக்குறித்து பேசப் போவதாக ஹமாஸின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு இரண்டு ஃபலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். போர் நிறுத்தம் அமலுக்கு வந்த இரவில் 15 வயதான நாதிர் அபுமகாஸிபை இஸ்ரேல் ராணுவம் அநியாயமாக சுட்டுக்கொன்றது. நன்றி, தூது
0 comments:
Post a Comment