21 Nov 2012
மும்பை:சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின் மரணத்தைத் தொடர்ந்து நடந்த முழு அடைப்பால் மும்ப நகரம் 2நாட்கள் முடங்கியதுக் குறித்து ஃபேஸ்புக் சமூக இணையதளத்தில் கருத்து தெரிவித்த ஷஹீன் தாதா என்ற பெண்மணிக்கும்,அவரது தோழி ரேணுவுக்கும் மத்திய அமைச்சர் மிலிந்த் தேவ்ரா ஆதரவு தெரிவித்துள்ளார்.
சிவசேனை கட்சித் தலைவர் பால் தாக்கரே இறந்ததைத் தொடர்ந்து மும்பை நகர் இரண்டு தினங்களுக்கு முடங்கியது. அனைத்து விதமான போக்குவரத்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு போலீஸார் அறிவுறுத்தினர். இதனால் அதிருப்தியடைந்த ஷஹீன் தாதா என்ற பெண், ஃபேஸ்புக் சமூக இணைய தளத்தில் தனது கருத்துகளைப் பதிவு செய்தார். “தாக்கரே மரணத்தை அடுத்து மும்பை ஸ்தம்பித்தது அச்சம் காரணமாகவே தவிர மரியாதையால் அல்ல’ என்று அவர் தெரிவித்திருந்தார். அவரது கருத்தை ஆதரிப்பதாக அவரது தோழி ரேணு, ஃபேஸ்புக் இணையதளத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, ஷஹீன் மற்றும் ரேணு ஆகிய இருவரையும் மும்பை போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் திங்கள்கிழமை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
ஃபேஸ்புக் இணையதளத்தில் கருத்து கூறிய ஷஹீன் மற்றும் அவரது தோழி ரேணுவும் கைது செய்யப்பட்டதை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மிலிந்த் தேவ்ரா கண்டித்துள்ளார். அவர் மும்பையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்தக் கைது என்பது சட்ட அமலாக்க அமைப்புகளின் தேவையற்ற எரிச்சலூட்டும் நடவடிக்கையாகும். அந்த இரு பெண்களும் இணையதளத்தில் தெரிவித்த கருத்துகள் தவறானவை அல்ல. அதற்காக, எந்தச் சட்டத்தின் கீழும் வழக்குப்பதியத் தேவையில்லை என்பது என் கருத்து” என்றார்.
இதனிடையே, ஷாஹீனின் உறவினர் தானே மாவட்டம் பால்கரில் நடத்தி வரும் மருத்துவமனைக்குள் சிவசேனை தொண்டர்கள் 40 பேர் ஞாயிற்றுக்கிழமை நுழைந்தனர். திடீர்த் தாக்குதலில் ஈடுபட்ட அவர்கள், அங்குள்ள பொருள்களைச் சூறையாடினர். இது தொடர்பாக 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், 9 பேரைக் கைது செய்துள்ளனர்.
ஃபேஸ்புக் இணையதளத்தில் கருத்து தெரிவித்த ஷாஹீன் மற்றும் அவரது தோழி கைது செய்யப்பட்டது தவறு என்று ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மகாராஷ்டிர முதல்வரிடம் பேசப் போவதாகவும் அவர் கூறினார்.
ஷாஹீன் கைது செய்யப்பட்டதை லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வானும் கண்டித்துள்ளார். இந்நிலையில், ஷாஹீன் மற்றும் அவரது தோழி கைது செய்யப்பட்டது தொடர்பாக மும்பையைச் சேர்ந்த பிரபல வழக்குரைஞர் ஆபா சிங், மகாராஷ்டிர மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்துள்ளார்.
முன்னதாக இந்திய ப்ரஸ் கவுன்சிலின் தலைவரும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு, இச்சம்பவத்தில் 2 பெண்கள் கைது செய்யப்பட்ட நிகழ்வை கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி, thoothu
0 comments:
Post a Comment