Saturday, September 29, 2012

உச்சநீதிமன்ற தீர்ப்பு:காவல்துறையை மதசார்பற்றதாக மாற்றுவதற்கான அழைப்பு – இ.எம்.அப்துற்றஹ்மான்!

இ.எம்.அப்துற்றஹ்மான்!

புதுடெல்லி:சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் தீவிரவாத முத்திரைக் குத்தி சிறையில் அடைக்கும் நிரபராதிகள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வெளியிட்ட கருத்துக்களை வரவேற்பதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் கூறியுள்ளார்.
1994-ஆம் ஆண்டு அஹ்மதாபாத்தில் ஜகன்னாதபூரி யாத்ராவின் போது வகுப்புக் கலவரத்தை தூண்ட சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு தடா சட்டத்தில் கைது செய்யப்பட்ட 11 பேரை விடுதலைச் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீவிரவாத செயல்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகளை குறித்து மீண்டும் அழுத்தம் திருத்தமாக கூறாமல் இருக்கவியலாது. ஆனால், அரசியல் சாசனமும், சட்டமும் கூறும் நடவடிக்கைகள் அல்லாத தனி நபர் சுதந்திரத்தின் மீது அத்துமீற தீவிரவாதத்தை ஒரு திரையாக பயன்படுத்த கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
‘எனது பெயர் கான்! ஆனால் நான் தீவிரவாதி அல்ல!’ என்று ஒரு நிரபராதி கூறாமல் இருக்கும் நடவடிக்கைதான் போலீஸ் தரப்பில் இருந்து உருவாகவேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்த உத்தரவை குஜராத் போலீஸ் மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த போலீசாரும் கடைப்பிடிக்க வேண்டியதாகும் என்று இ.எம்.அப்துற்றஹ்மான் கூறினார்.
அரசு நிர்வாகத்தையும்,காவல்துறையையும் மதசார்பற்றதாக மாற்றுவதற்கும், முஸ்லிம்களுக்கு எதிரான வகுப்புவாத பாரபட்சத்திற்கு முடிவுக் கட்டவும் உச்சநீதிமன்ற அளித்த எச்சரிக்கைதான் இத்தீர்ப்பு. காவல்துறையின் பல்வேறு பிரிவுகளை அதிலும் குறிப்பாக உளவுத்துறையை முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகளின் மீது ஓரவஞ்சனையாக செயல்படுவதில் இருந்து சுத்தப்படுத்த வேண்டும் என்று இ.எம்.அப்துற்றஹ்மான் மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தார்.
நிபந்தனைகளை கடைப்பிடிக்காமல் தடாச் சட்டத்தை பிரயோகித்து பின்னர் கைது செய்யப்பட்டவர்களை விடுதலைச் செய்ததை வாய்ப்பாக பயன்படுத்தி நாட்டின் எதிரிகள், தடாச்சட்டம் துஷ்பிரயோகம் செய்வதாக பிரச்சாரம் செய்கின்றனர் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
நிரபராதிகளான முஸ்லிம்கள் ஜாமீன் கூட கிடைக்காமல் நீண்டகாலமாக சட்டவிரோத காவலில் அடைக்கப்பட்டிருப்பது காலாவதியான தடாச் சட்டத்தில் மட்டுமல்ல. தடாச் சட்டத்தை புதுப்பித்து உருவாக்கப்பட்டUAPA சட்டத்தின் மூலமும் நிரபராதியான முஸ்லிம்களை சிறையில் அடைப்பது தொடருகிறது.
தடா மற்றும் பொடா சட்டத்தில் உள்ள கடுமையான பிரிவுகளை உட்படுத்தி திருத்தப்பட்ட UAPA சட்டத்தை வாபஸ் பெறுவதற்கு மத்திய அரசு மற்றும் அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட வழிகாட்டுதல்தான் உச்சநீதிமன்றம் தற்போது தெரிவித்துள்ள கருத்துக்கள் ஆகும் என்று இ.எம்.அப்துற்றஹ்மான் கூறியுள்ளார்

0 comments:

Post a Comment