28 Sep 2012
கூடங்குளம்:கூடங்குளம் அணுஉலையை மூட வலியுறுத்தி, அக்டோபர் 29-ம் தேதி தமிழக சட்டப் பேரவையை முற்றுகையிடப் போவதாக, அரசியல் கட்சிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுஉலையை மூட வலியுறுத்தி அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இடிந்தகரையில் அணுசக்திக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்ற அரசியல் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று(வியாழக்கிழமை) நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் பேசுகையில், இந்தப் பகுதி மக்கள் அணு உலைக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இப் போராட்டம் தமிழக மக்களுக்காக நடத்தப்படும் போராட்டம். இதுபற்றி இன்னமும் பலருக்கு தெரியவில்லை. எனவே, அணு உலைக்கெதிரான போராட்டத்தை தமிழக மக்களின் கோரிக்கைப் போராட்டமாக மாற்ற வேண்டும். தமிழக சட்டப்பேரவையின் வைர விழா அக்டோபர் 29-ம் தேதி சென்னை கோட்டையில் நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் அணுஉலையை மூட வலியுறுத்தி சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த வேண்டும். இதில், அணுஉலைக்கெதிரான அனைத்து அரசியல் கட்சியினரும் கலந்துகொள்ள வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் இக் கூட்டத்தில் நஸ்ருத்தீன் (பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா), வேல்முருகன் (தமிழர் வாழ்வுரிமைக் கட்சி), கொளத்தூர் மணி (திராவிடர் விடுதலைக் கழகம்),நெல்லை முபாரக் (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா), ரவிக்குமார் (தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை), வன்னியஅரசு (விடுதலைச் சிறுத்தைகள்), வியனரசு (பாமக), ஷெரீஃப் (மக்கள் ஜனநாயகக் கட்சி), திருப்பூர் சக்திவேல் (மனிதநேய பாசறை), சண்முகசுந்தரம் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்), அரங்ககுணசேகர் (தமிழக மக்கள் புரட்சிக் கழகம்), மிசா பாண்டியன் (மார்க்சிஸ்ட் லெனின் மக்கள் விடுதலை இயக்கம்), மகேஷ் (காந்தி மக்கள் மன்றம்), துரை சம்பத் (தந்தை பெரியார் திராவிடர் கழகம்), கிறிஸ்டினா (பெண்கள் முன்னணி), அருணா (மகளிர் அயம்) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்
0 comments:
Post a Comment