Thursday, September 27, 2012

அப்பாவி சிறுபான்மை மக்கள் மீது தீவிரவாத முத்திரையை குத்தாதீர்கள்! – அஹ்மதாபாத் வழக்கில் 11 முஸ்லிம்களை விடுவித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

Police must ensure that no innocent person has the feeling of sufferance only because “my name is Khan, but I am not a terrorist,” a Bench of Justices H.L. Dattu and C.K. Prasad said on Wednesday.

புதுடெல்லி:ஒரு நபரின் மதத்தை பார்த்து அவருக்கு கொடுமை இழைக்க சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யாதீர் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தீவிரவாதிகள் என்று குற்றம் சாட்டி குஜராத் மாநில தடா நீதிமன்றம் தண்டித்த 11 அப்பாவி முஸ்லிம்களை 10 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலைச்செய்த வழக்கில் நீதிபதிகளான ஹெச்.எல்.தத்து, சி.கே.பிரசாத் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பில் கூறியது.
1994-ஆம் ஆண்டு ஜூன் மாதம் குஜராத் மாநிலம் அஹ்மதாபாத்தில் ஹிந்துக்கள் நடத்திய ஜகன்னாத பூரி யாத்திரையின் போது கலவரத்தை நடத்த சதித்திட்ட தீட்டினார்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 முஸ்லிம்கள் சமர்ப்பித்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
தாக்குதல் நடத்த திட்டமிட்டார்கள் என குற்றம் சாட்டி அஷ்ரஃப் கான், பாபு முன்னி கான் ஆகியோரை கைது செய்த போலீஸ், தீவிரவாத குற்றம் சுமத்தி மேலும் பலரை கைது செய்தது. 2002 ஜனவரி 31-ஆம் தேதி அஹ்மதாபாத் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது.
இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற அமர்வு விசாரித்தது. விசாரணையின் இறுதியில் அளித்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியது:  சட்டத்தை அமல்படுத்த நியமிக்கப்பட்ட போலீஸ் சூப்பிரண்டும், ஐ.ஜி உள்ளிட்ட இதர அதிகாரிகளும் அதனை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. பிறந்த மதத்தின் பெயரால் கொடுமை இழைக்கப்படுகிறோம் என்று ஒரு அப்பாவிக்கும் தோன்றக் கூடாது. இதனை சட்டத்தின் பாதுகாவலர்கள் உறுதிச்செய்ய வேண்டும்.
இதனை கூறுகையில் நீதிபதிகள் ஷாரூக்கான் நடித்த ’மை நேம் ஈஸ் கான்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள  ‘my name is Khan, but I am not a terrorist’ என்ற வசனத்தை சுட்டிக்காட்டினர்.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம்களுக்கு தண்டனையை அதிகப்படுத்த கோரும் குஜராத் மாநில அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது.
எஃப்.ஐ.ஆர் சமர்ப்பிக்கும் முன்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் அனுமதியை பெறவேண்டும் என்ற தடாச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள சட்டப் பிரிவை அரசு கடைப்பிடிக்கவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது. தடா சட்டத்தை சுமத்தும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகளை பேணாததால் பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் எதிரிகளும் இதனால் பலன் அடைந்தனர். இதன் மூலம் இச்சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக கூறப்பட்டது. சட்டத்தை பிரயோகிக்கும் பொழுது தனி நபரின் சுதந்திரத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை உறுதிச் செய்யவேண்டும். தீவிரவாதத்தை தடுப்பதிலும், அதிகமான மக்கள் பலியாகக்கூடாது என்பதில் போலீசாரின் உறுதி பாராட்டத்தக்கது. ஆனால், இவ்வழக்கில் ஆயுதங்களும், வெடிப்பொருட்களையும் கண்டுபிடிக்க புலனாய்வு ஏஜன்சிகளால் இயலவில்லை. இவ்வாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியது.

0 comments:

Post a Comment