19 Sep 2012
பெங்களூர்:பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்டு கர்நாடகா மாநிலம் பரப்பனா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கேரள மாநில பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனியின் உடல் நிலை மோசமடைந்துள்ளது. ஏற்கனவே குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டு துண்டிக்கப்பட்ட வலதுகாலின் மேல் பகுதி செயலிழந்துள்ளது. காலில் தொடும்பொழுது ரப்பரைப்போல் உணர்வதாக உள்பகுதியில் தாங்கமுடியாத வலி ஏற்படுவதாகவும் சிறையில் வைத்து தேஜஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் மஃதனி கூறியுள்ளார்.
வலது கண்ணின் பார்வை முற்றிலும் பறிபோன சூழல். எதுவுமே அவரால் பார்க்க முடியவில்லை. இடது கண்ணில் மட்டுமே சிறிதளவு பார்வை திறன் உள்ளது. பார்வை இழக்க காரணம் முறை தவறி நடத்தப்பட்ட லேசர் சிகிட்சையாகும். முறையான தொடர் சிகிட்சை அளிக்கப்பட்டிருந்தால் குணமடைந்திருக்கும். குறிப்பிட்ட நேரத்தில் லேசர் சிகிட்சையை அளிக்காமல் சிறை அதிகாரிகள் அலட்சிய போக்கை கடைப்பிடித்துள்ளனர். கண்ணின் சிகிட்சை அறிக்கையை சிறை அதிகாரிகள் மூடி மறைத்துள்ளனர். நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டதால் லேசர் சிகிட்சை அளிக்க அழைத்துச் சென்றனர். ஆனால், பல மாதங்கள் கழிந்துவிட்டதால் அவ்வேளையில் லேசர் சிகிட்சை அளிக்க முடியாத சூழல் உருவானது என்று அப்துல் நாஸர் மஃதனி கூறினார்.
தற்போது அப்துல் நாஸர் மஃதனியை நீரழிவு நோயுடன், சிறுநீரகம் தொடர்பான நோய்களும் வாட்டுகிறது. கை,கால்கள் எல்லாம் மரத்துப் போயுள்ளதாகவும், கூடவே இதயம் தொடர்பான நோய்களும் இருப்பதால் வலி மூலம் தூங்க முடியவில்லை என்று அப்துல் நாஸர் மஃதனி கூறுகிறார்.
சுயமாக எழுந்து மல, ஜலம் கழிக்க முடியாத சூழலில் உள்ளார் மஃதனி. சிறை வார்டில் அவ்வப்போது பெட்சீட்டை மாற்றுவதற்கான வசதிகள் இல்லை. ஆனால், மன உறுதியை கைவிடாமல் இருப்பதாக அவர் கூறினார்.
’நிரபராதியான என்னை இவ்வழக்கின் 31-வது குற்றவாளியாகத்தான் சேர்த்துள்ளனர். ஆனால், சட்டம் வழங்கு சலுகைகளை மறுப்பதை குறித்து நீதிமன்றத்தில் புகார்’ அளித்தேன் என்று அப்துல் நாஸர் மஃதனி கூறுகிறார். 150க்கும் மேற்பட்ட சாட்சிகள் இருப்பதாக கூறினாலும் இவ்வழக்கில் 2 வருடங்கள் கழிந்த பிறகும் ஒரு சாட்சியிடம் கூட விசாரணை நடத்தவில்லை. கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் உள்ள சாட்சிகளை அழைத்துவர ஏன் இவ்வளவு சிரமம்? என்று மஃதனி கேள்வி எழுப்புகிறார்.
சாட்சிகளிடம் ஒரு தடவையாவது நீதிமன்றத்திற்கு அழைத்து வரவேண்டும் என்ற வழக்கறிஞர்களின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை. முதல் சாட்சியான ஸமீர் வெறுமனே நீதிமன்றத்திற்கு வந்து செல்கிறார். அவரிடம் விசாரணை நடத்தப்படவில்லை. சாட்சிகளிடம் விசாரணை நடத்தினால் இவ்வழக்கு தவிடுபொடியாகும் என்று அரசுக்கு தெரியும். ஆகையால் விசாரணையை எவ்வித காரணமும் இல்லாமல் நீட்டிக்கொண்டு செல்ல தந்திரங்களை மேற்கொள்கின்றனர் என்று அப்துல் நாஸர் மஃதனி கூறினார்
0 comments:
Post a Comment