மருதாணி வதந்தியை எஸ்.எம்.எஸ். மூலம் பரப்பி முஸ்லிம்களிடையே பீதியைக் கிளப்பிய சதிகாரனைக் கண்டுபிடிப்பதற்காக தனிப் படை அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் ஜே.கே. திரிபாதி தெரிவித்தார்.
“இப்படி பீதியைக் கிளப்பியவர்கள் மீது நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம். இந்தக் கயவர்களைக் கண்டுபிடிக்க சிறப்புப் படைகளை அமைத்துள்ளோம். வெகு விரைவில் அவர்கள் பிடிக்கப்படுவார்கள்” என்று அவர் கூறினார்.
கிருஷ்ணகிரி அல்லது ஆம்பூரிலிருந்து இந்த எஸ்.எம்.எஸ்.கள் வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
“ரெட் கோன் என்ற மெஹந்தியை ஒரு சிறுமி கையில் இட்டதும் அவளது கைகளும், கால்களும் புண்ணாகி விட்டன. எனவே மருத்துவர்கள் அவளது கைகளையும், கால்களையும் துண்டித்து விட தீர்மானித்தனர்” என்று அந்த எஸ்.எம்.எஸ். தெரிவிக்கின்றது.
இந்தச் செய்தி எந்த அடிப்படையுமற்றது, மக்களிடையே பீதியைக் கிளப்பும் ஒரே நோக்கத்தில் இது பரப்பப்பட்டுள்ளது என்று காவல்துறை அதிகாரிகளும், மருத்துவர்களும் தெரிவித்தனர்.
இந்த எஸ்.எம்.எஸ்.கள் பரவியதுமே மருதாணி இட்ட இரண்டு பெண்கள் இறந்துவிட்டதாகவும், ஒரு சிறுமியின் கைகள் செயலிழந்து விட்டதாகவும் வதந்திகள் பரவின.
இந்த வதந்தியையொட்டி பல அரசு மருத்துவமனைகளில் பெண்களும், குழந்தைகளும் குவியத் தொடங்கினர். சிலர் கையில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். இது மனோரீதியாக பாதிப்பு ஏற்பட்டதன் விளைவு என்று மருத்துவர்கள் கூறினர்.
சென்னை அரசு பொது மருத்துவமனை, குழந்தைகள் நல மருத்தவமனை, அரசு ராயப்பேட்டை மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளுக்கு காவல்துறையினர் சென்று பெண்களையும், குழந்தைகளையும் சமாதானம் செய்தனர்.
0 comments:
Post a Comment