பள்ளிகளில் வாகனப் பராமரிப்புக்காகவும், மாணவர்களைக் கண்காணிப்பதற்காகவும் தனியாகப் பணியாளரை நியமிக்க வேண்டும் என்றார் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன்.
தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும் பள்ளி வாகனங்களைப் பராமரிப்பது தொடர்பாக அனைத்து பள்ளி, கல்லூரி தாளாளர்கள், தலைமை ஆசிரியர்களுடனான ஆலோசனை - பயிற்சிக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
எந்தவித தடுப்பு நோக்கமும் அறியாத குழந்தைகள் படிக்கும் பள்ளித் தளங்களை மிகுந்த பாதுகாப்போடு வைத்திருக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும், பள்ளி வாகனத்திலும் தீத்தடுப்பு சாதனம் கட்டாயம் இருக்க வேண்டும்.
எந்தப் பள்ளியும் கூரைக் கொட்டகைகளில் இயங்கக் கூடாது. இரும்புக் கூரை அல்லது கான்கிரீட் கூரையின் கீழ் மட்டுமே இயங்க வேண்டும். ஒவ்வொரு பள்ளிகளிலும் அவசர வெளியேறும் வழியை கட்டாயம் அமைத்திருக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரி வாகன ஓட்டுநர்கள் கட்டாயம் 10 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். வாகனச் சோதனையை உரிய காலத்துக்குள் செய்ய வேண்டும். பள்ளி வாகனங்களின் தரம், உரிய ஆவணங்கள் பற்றி பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஆய்வு செய்ய வேண்டும்.
மாணவர்களுக்கு சாலை விதிகள் குறித்து ஆசிரியர்கள் வகுப்பு நடத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் வாகனப் பராமரிப்புக்கும், மாணவர்களைக் கண்காணிக்கவும் தனியாக பணியாளரை நியமிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் அவசர வழிகள், வாகனங்களில் முதலுதவிப் பெட்டிகள் போன்றவை இருக்கிறதா என்பதை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.
மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் நிகழாத வகையில் முன்னெச்சரிக்கையாகச் செயல்பட்டு மாணவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றார் பாஸ்கரன்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அனில்குமார் கிரி, மாவட்ட வருவாய் அலுவலர் சீ. சுரேஷ்குமார், முதன்மைக் கல்வி அலுவலர் சு. மதி, மண்டலப் போக்குவரத்து துணை ஆணையர் வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நன்றி: அதிரை போஸ்ட்
நன்றி: அதிரை போஸ்ட்
0 comments:
Post a Comment