Wednesday, August 1, 2012

உளநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் மீது மிருகத்தனமான தாக்குதல்!


அல் ஹலீல்: கடந்த திங்கட்கிழமை (30/07/2012) பெய்ட் உம்மார் கிராமத்தைச் சேர்ந்த உளநலம் பாதிக்கப் பட்ட பலஸ்தீன் இளைஞனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த ஆக்கிரமிப்புப் படை அவனை மிருகத்தனமாகத் தாக்கியுள்ளது.

முஹம்மத் அபூ தியா (வயது 23) உளநலம் பாதிக்கப்பட்டவர். அவருடைய வீட்டுக்குள் அடாவடியாக நுழைந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம், அவரைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளது. உளநலம் பாதிக்கப்பட்ட தமது மகன் கொடூரமாக அடித்து இம்சிக்கப்படுவது பொறுக்காமல் தடுக்க முனைந்த பெற்றோரையும் ஆக்கிரமிப்புப் படை மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளது.

அபூ தியாவின் நிலைமை குறித்து விளக்கிப் புரியவைக்க முற்பட்ட பெற்றோரின் மன்றாட்டங்கள் எவற்றையுமே பொருட்படுத்தாத இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை, மேற்படி இளைஞனைத் தடுப்பு முகாமுக்கு இழுத்துச் சென்றுள்ளது என பெய்ட் உம்மார் கிராமத்தின் தேசிய இணைப்பாளர் முஹம்மத் அவாத் குறிப்பிட்டுள்ளார். 

உளநலமற்ற ஒருவர் என்ற கருணைகூட இன்றி, அபூ தியாவையும் அவரது வயோதிகப் பெற்றோரையும் மிருகத்தனமாகத் தாக்கிவிட்டு, அவ் இளைஞனைத் தடுப்புமுகாமுக்கு எடுத்துச் சென்றுள்ள இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளரின் செயல் சகலவித மனிதப் பண்புகளுக்கும் அப்பாற்பட்டது என உள்ளூர் மக்கள் அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

0 comments:

Post a Comment