சென்னை:ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கமாக எஸ்.டி.பி.ஐ கட்சி இருந்து வருவது பாராட்டுக்குரியது என்று தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின்(எஸ்.டி.பி.ஐ) சார்பாக நேற்றைய தினம் இரவு சென்னை பெரியார் திடலில் ஈதுல் ஃபித்ர் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் எஸ்.எம்.ரஃபீக் அஹ்மத், துணைத் தலைவர் ஏ.பிலால் ஹாஜியார், செயலாளர்கள் கே.செய்யது இப்ராஹீம், ஜி.அப்துல் ஸத்தார், வி.எம்.அபூதாஹிர், ஏ.செய்யது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
அப்பொழுது அவர் தனது உரையில் கூறியது:
தி.மு.கவுக்கும், முஸ்லிம் சமுதாயத்திற்கும் இடையே உறவு தேர்தலுக்காகவோ அல்லது அரசியல் நோக்கத்திற்காகவோ அல்ல. இந்த உறவு தொன்றுதொட்டு இருந்து வரும் உறவு. ஒடுக்கப்பட்ட மக்களின், சிறுபான்மை மக்களின் வாழ்க்கையில் வசந்தத்தை ஏற்படுத்த முஸ்லிம் சமுதாயத்தோடு நீண்டகாலமாக தொடர்பு வைத்திருக்கும் இயக்கம் தி.மு.க.நீண்டகாலமாக தொடர்பு வைத்திருக்கும் தலைவர் கருணாநிதி ஆவார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கமாக எஸ்.டி.பி.ஐ இருந்து வருவது பாராட்டுக்குரியது. இன்று மத்திய-மாநில அளவில் எத்தனையோ பிரச்சனைகள், இலங்கை தமிழர் பிரச்சனை, சேது சமுத்திர திட்ட பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை, எல்லாவற்றிற்கும் மேலாக விலைவாசி உயர்வு பிரச்சனை, இப்படி பல்வேறு பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து அதற்காக ஆர்ப்பாட்டங்களை நடத்திவரும் இயக்கமாக எஸ்.டி.பி.ஐ திகழ்கிறது.
தமிழகம் எத்தனையோ தேர்தல்களை பார்த்தது உண்டு. ஆனால், தமிழ்நாட்டில் கட்சி கூட்டணி முறையை முதன்முதலாக அறிமுகப்படுத்தியது தி.மு.கவும், முஸ்லிம் லீக்கும்தான். 1962-ஆம் ஆண்டு இரண்டு கட்சிகளும் தேர்தலில் கூட்டு சேர்ந்து போட்டியிட்டன. 1967-ஆம் ஆண்டு தொடர்ந்து கூட்டணி நீடித்து அதன் காரணமாக தி.மு.க ஆட்சியையும் பிடித்தது. இப்படி முஸ்லிம் சமுதாயத்துடன் தி.மு.க தொடர்ந்து உறவு வைத்து வருகிறது. அந்த உறவு எஸ்.டி.பி.ஐ மூலமாக மேலும் வளரும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல், ஜமாஅத்துல் உலமா சபை மாநில தலைவர் மெளலவி ஏ.இ.அப்துல் ரஹ்மான், சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை தலைவர் மேலை நாசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமா வளவன், பேராயர் எஸ்றா சற்குணம் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பொதுமக்களை எஸ்.டி.பி.ஐயின் மாநில பொதுச்செயலாளர் பி.அப்துல் ஹமீது வரவேற்றார். இறுதியில் எஸ்.டி.பி.ஐயின் இன்னொரு மாநில பொதுச் செயலாளர் நெல்லை முபாரக் நன்றி நவின்றார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment