Saturday, August 18, 2012

அஸ்ஸாமில் மீண்டும் கலவரம்.......


கொக்ராஜர்:அஸ்ஸாமில் கொக்ராஜரில் மீண்டும் உருவான கலவரத்தில் ஒன்பது பேருக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.  காமரூப் மாவட்டத்திலும் கலவரம் பரவியுள்ளது.
கொக்ராஜரில் கோஸாயிகான் நகரத்தில் ஷேர் ஆட்டோவில் பயணித்த சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த குடும்பத்தினர் மீது ஆசிட் வீசப்பட்டது. இதில் காயமடைந்த 9 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு தொடருகிறது. காமரூப் மாவட்டத்தில் ரங்கியா பகுதியில் கலவரம் பரவியுள்ளது. இங்கு ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாகின. இதனைத் தொடர்ந்து இங்கு காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காமரூப் மாவட்டத்தில் ராணுவம் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளது. பக்ஸாரில் இருந்து ரங்கியாவுக்கு சென்றுகொண்டிருந்த கார் ஒன்று காந்திபாரியில் வைத்து புதன்கிழமை இரவு தீவைத்துக் கொளுத்தப்பட்டது. காரின் ஓட்டுநர் ஷாஹிதுல் ஹுஸைனை காணவில்லை. தகவல் அறிந்த ஊர்மக்கள் ரங்கியாவில் தேசிய நெடுஞ்சாலையை மறித்தனர். வியாழக்கிழமை ரங்கியா எஸ்.டி.ஒ பர்ணாலி தேகாவின் காரையும் தாக்க முயற்சி நடந்தது. இதுத்தொடர்பான வழக்கில் போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
வன்முறையைத் தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகையை பிரயோகித்து வானை நோக்கி சுட்டனர். எஸ்.டி.ஒ பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில், குவஹாத்திக்கு சென்றுக்கொண்டிருந்த ஒரு பேருந்தையும், தேசிய பாதையில் சிக்கிய ஏராளமான வாகனங்களையும் கேகாஹந்தியில் ஒரு மரப்பாலத்தையும் வன்முறைக் கும்பல் தீவைத்துக் கொளுத்தியுள்ளது.
உயர் மாவட்ட அதிகாரி அப்பகுதியில் முகாமிட்டுள்ளார். காம்ரூப் மாவட்டத்தில் வன்முறை தொடர்ந்தாலும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

0 comments:

Post a Comment