Saturday, August 4, 2012

புதிய தேர்தல் கமிஷனராக அகமது ஜெய்தி தேர்வாகிறார்!


தலைமை தேர்தல் கமிஷன் 3 உயர் அதிகாரிகளைக் கொண்ட அமைப்பாகும். அதில் தலைமை தேர்தல் கமிஷனராக ஒருவரும், தேர்தல் கமிஷனர்களாக 2 பேரும் உள்ளனர். தலைமை தேர்தல் கமிஷனராக குரேஷி, தேர்தல் அதிகாரிகளாக சம்பத், பிரம்மா இருந்தனர். 

கடந்த ஜூன் மாதம் குரேஷி ஓய்வு பெற்று விட்டதால் தலைமை தேர்தல் கமிஷனராக சம்பத் பதவி உயர்வு பெற்றார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவர் பதவி உயர்வு பெற்றதால், அவர் வகித்து வந்த தேர்தல் கமிஷனர் இடம் காலியானது. அந்த இடத்துக்கு அந்தமான் தீவு தலைமை செயலாளர் ஷெரீப் நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியானது. 

ஷெரீப்புக்கு சொந்த ஊர் வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி ஆகும். இவர் தேர்தல் கமிஷனராக நியமிக்கப்படும் பட்சத்தில், தலைமை தேர்தல் கமிஷன் அமைப்பில் உள்ள 3 அதிகாரிகளில் 2 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இந்த நிலையில் திடீர் திருப்பமாக ஷெரீப் பாராளுமன்ற மேல்-சபை செயலாளராக நியமிக்கப்படுவார் என்று தெரிய வந்துள்ளது. ஹமீத் அன்சாரி மீண்டும் துணை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஷெரீப் மேல்-சபை பணிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே காலியாக உள்ள தேர்தல் கமிஷனர் இடத்துக்கு உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சையது நசீம் அகமது ஜெய்தி நியமனம் செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. 60 வயதாகும் ஜெய்தி 1976-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பேட்சை சேர்ந்தவர். இவரை தேர்தல் கமிஷனர் பதவியில் அமர்த்த பிரதமர் மன்மோகன்சிங் ஒப்புதல் அளித்து விட்டார். அதன் பேரில் ஜெய்தி நியமன அறிவிப்பை ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment