22 May 2013
புதுடெல்லி:சட்டீஷ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்பு படையினர் விதை தூவும் திருவிழா கொண்டாட்டத்தில்ஈடுபட்டிருந்த அப்பாவி கிராமவாசிகள் மீது அநியாயமாக துப்பாக்கிச்சூடு நடத்தி எட்டுபேரை கொலைச் செய்தனர்.இச்சம்பவத்தில் உயிரிழந்த அப்பாவிகிராமத்தினர் 8 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ. 9 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த வாரம் நடந்த மோதலில் உயிரிழந்த 8 பேரில் 3 பேர் சிறுவர்களாவர். இவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இழப்பீடு வழங்க முடிவு செய்துள்ளது. இதில் ரூ. 3 லட்சம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் தனி நிதியத்திலிருந்தும், ரூ. 3 லட்சம் தொகையானது தீவிரவாத வன்முறையால் பாதிப்புக்குள்ளாவோரின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக ஏற்படுத்தப்பட்ட நிதியத்திலிருந்தும், ரூ. 1 லட்சம் பாதுகாப்பு சார்ந்த செலவினத்துக்காகவும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் தலா ரூ. 2 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்குவதென மாநில அரசு முடிவு செய்துள்ளது.
சிஆர்பிஎப் மேற்கொண்ட இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக நீதிபதி வி.கே. அகர்வால் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இதே குழுவினர்தான் இப்போது கடந்த ஆண்டு ஜூன் 28 மற்றும் 29-ம் தேதி நடைபெற்ற என்கவுன்ட்டர் தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment