Monday, May 20, 2013

கிரிக்கெட் சூதாட்டம்:தடுக்கச் சட்டம் கொண்டுவருகிறது மத்திய அரசு!

                            20 May 2013 kapil-sibal_65
 
    புதுடெல்லி:கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளை வைத்து நடத்தப்படும் சூதாட்டத்தைத் தடுக்க தனிச் சட்டம் கொண்டுவரப்படும் என மத்திய சட்டத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.
 
     3 ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களான ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா, அங்கித் சவாண் ஆகிய மூன்று பேர் டெல்லி போலீஸாரால் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக தரகர்கள் சிலரையும் கைது செய்துள்ள டெல்லி போலீஸார், அவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தரகர்களுக்கும் வெளிநாடுகளில் உள்ள நிழல் உலக தாதாக்களுக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது நடைபெறும் சூதாட்டத்தில் பல கோடி ரூபாய் புழங்குவதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், கிரிக்கெட் சூதாட்டத்தைத் தடுக்கும் வகையில் தனியாக சட்டம் இயற்றுவது குறித்து மத்திய விளையாட்டு அமைச்சகம் சட்ட அமைச்சகத்துடன் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
 
     இதுகுறித்து மத்திய சட்டத் துறை அமைச்சர் கபில் சிபல் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் ஃபிக்ஸிங், மேட்ச் ஃபிக்ஸிங் உள்ளிட்ட சூதாட்டம் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. இது விளையாட்டு மீது பொதுமக்களுக்கு உள்ள நம்பகத்தன்மையை சீர்குலைப்பதாக உள்ளது. இது விளையாட்டில் பங்குபெறுபவர்கள் மற்றும் ரசிகர்களின் நலனுக்கு உகந்தது அல்ல. கிரிக்கெட்டில் மட்டுமல்லாது மற்ற விளையாட்டுகளிலும் இதுபோன்ற சூதாட்டம் நடைபெறுகிறது. எனவே, சூதாட்டம் காரணமாக விளையாட்டின் மீது மக்கள்நம்பிக்கை இழப்பதை அனுமதிக்க முடியாது. இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 
     கிரிக்கெட் போட்டிகளை வைத்து நடைபெறும் சூதாட்டங்களைத் தடுப்பதற்கு இப்போது உள்ள இந்திய தண்டனைச் சட்டத்தில் இடம் இல்லை. எனவே, கிரிக்கெட் சூதாட்டத்தைத் தடுப்பதற்கு தனியாக சட்டம் தேவைப்படுகிறது. இதுதொடர்பாக வரைவு மசோதா தயாரிப்பது குறித்து மத்திய விளையாட்டு அமைச்சர் ஜிதேந்திர சிங்குடனும், சட்டத் துறை அமைச்சக அதிகாரிகளுடனும் பேசி உள்ளேன். சூதாட்டத் தடுப்பு மசோதா அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய அனைத்து முயற்சியும் மேற்கொள்ளப்படும். இதற்கு எந்த அரசியல் கட்சியும் தடையாக இருக்காது என்று நம்புகிறேன் என்றார் கபில் சிபல்.
 
     இதனிடையே இந்திய கிரிக்கெட் வாரியத்தை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் கொண்டுவர வேண்டும் என மத்திய வீட்டு வசதித் துறை அமைச்சர் அஜய் மக்கான் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் விளையாட்டு அமைச்சகம் சார்பில் மத்திய தகவல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றிருப்பதாகவும் மக்கான்தெரிவித்தார். முன்னதாக மக்கான் விளையாட்டு அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment