Friday, May 24, 2013

மண்குடம்


சென்னை இப்போதெல்லாம் முன்பு போல் இல்லை. இது போன்று பழமை பேசிகள் சிலர் பேசுவதைக் கேட்டிருப்போம் அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் மாறவில்லை. முஸ்லிம் பெயருள்ளவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது.

இந்தியாவின் டெட்ராய்ட் என்று பெயர் எடுக்க சென்னை விரும்புகிறது. நல்ல விஷயம் தான், ஹுண்டாய், போர்டு என்று கார் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சென்னையைச் சுற்றி தொழிற்சாலைகள் அமைத்துள்ளன. இதனால் பல்வேறு மாநிலத்தவர்களோடு பல்வேறு நாட்டவர்களும் சென்னையில் நடமாடுகிறார்கள்.


இருக்கட்டும் அதனால் என்ன?

தென் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் விமான நிலையத்தைப் படம் பிடித்தாராம் மத்திய அமைச்சர் சிதம்பரத்தையும் படம் பிடித்துள்ளார் அவர். அவர் பெயர் முஸ்லிம் பெயர் ஆக வேறு போய்விட்டது. கேட்கவா வேண்டும் நம் காவல்துறை சிங்கங்களுக்கு? உள்ளே தள்ளி வழக்குப் போட்டனர். வழக்கு இப்போது  என்ன ஆனதோ? தெரியவில்லை.

அதிரையைச் சேர்ந்த தமீம் அன்சாரி என்பவர் என்ன எழவுக்கோ கடற்படை நிலையங்களையும் இன்னும் சில இடங்களையும்  படம் எடுத்தாராம். அவர் மேல் தொடுத்த தேசவிரோத வழக்குகளுக்கோ, பாகிஸ்தான் உளவு அமைப்புகளின் கைக்கூலி என்ற குற்றச் சாட்டுக்கோ தக்க ஆதாரம் காவல் சிங்கங்களால் நிரூபிக்க முடியாததால் நீதிமன்றமும் அவரை விடுதலை செய்தது. ஆனால் அவரை பயங்கரவாதியாகவே மாலைமலர் போன்ற நாளிதழ்கள் இன்னும் எழுதி வருகின்றன.

நேற்று சென்னை  பெரியார் ஈ.வே.ரா. நெடுஞ்சாலை கீழ்ப்பாக்கம் அருகே உள்ள ஒரு அடுக்கு மாடிக் கட்டடத்தில் விஜயகர் என்பவர் அவரது வீட்டைக் காலி செய்யுமாறு நீதிமன்ற உத்தரவுப்படி கோரப்பட்டது. விஜயகர் மதுரைக் காரராம். விஜயகருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்ததால் அடுக்குமாடி குடியிருப்போர் சங்க செயலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தன வீட்டுக்குள்  சென்று தன்னிடம் இருந்த உரிமம் பெற்ற ஜெர்மானியக் கைத்துப்பாக்கி ஒன்றை எடுத்து தற்கொலை செய்யப் போவதாகவும், தடுக்க வருவோரை சுட்டுவிடப் போவதாகவும் மிரட்டி உள்ளார். 11 மணிநேரம் நடந்த நாடகத்தை அடுத்து விஜயகருக்கு போரடித்துப் போனதோ என்னவோ, தன தோழியுடன் காரில் ஏற முயன்ற போது சுற்றி இருந்தவர்கள் அவரைப் பிடித்து நையப் புடைத்து காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

 நம் காவல் சிங்கங்கள் விஜயகர் மனநிலை பிறழ்ந்தவர் என்று சான்றளித்து இன்று அவரை அயனாவரத்தில் உள்ள மனநிலை மருத்துவ விடுதியில் சேர்த்துள்ளனர்.

நமக்குப் புரியாத செய்தி என்னவென்றால், மனநிலை பிறழ்ந்தவருக்கு கைத்துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமம் வழங்கும் அளவுக்கா நம் காவல்துறை மனநிலை பிறழ்ந்து  உள்ளது?

ஒருவேளை விஜயகரின் பெயர் விசாம் அல்லது வசீம் என்று இருந்திருந்தால் காவல் துறை மட்டுமின்றி பத்திரிகைகளும் தமிழகத்தில் ஒசாமா ஒற்றர் கைது என்றெல்லாம் பரப்பி இந்நேரம் தமிழகத்தை மாபெரும் பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து காத்திருப்பார்கள். என்ன செய்வது? விஜயகர் மண்குடமாகி அல்லவா போய்விட்டார்?

-அபூஷைமா sinthikkavum

0 comments:

Post a Comment