16 May 2013
புதுடெல்லி:ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வளைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக சிலர் மீது மாநில அரசுகள் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66ஏ பிரிவை தவறாகப் பயன்படுத்தி இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அந்த மனுவில்சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிவசேனை தலைவர் பால் தாக்கரே இறந்தபோது மும்பையில் முழு அடைப்பு அனுசரிக்கப்பட்டது. அப்போது அதனை விமர்சித்து பேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்த இளம் பெண்ணையும், அதனை பகிர்ந்து கொண்ட அவரது தோழியையும் மகாராஷ்டிர போலீஸார் கைது செய்தனர்.
இதே போல தமிழக ஆளுநர் கே.ரோசய்யா, காங்கிரஸ் எம்.எல்.ஏ. அமான்ஜி கிருஷ்ண மோகன் ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்ததாக ஹைதராபாத் பெண்கள் அமைப்பைச் சேர்ந்த ஜெயா விந்தயால் கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து சட்ட மாணவி ஸ்ரேயா சிங்கல் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக எடுத்துக் கொண்டு விசாரிக்க வேண்டும் என்றும், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66ஏ பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனை நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், தீபக் மிஸ்ரா ஆகியோர் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டனர். முன்னதாக கடந்த ஆண்டு நவம்பரில், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66ஏ பிரிவில் கொண்டு வரப்பட்ட திருத்தம், அது தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஃபேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்ததற்காக மகாராஷ்டிரத்தில் இரு இளம் பெண்கள் கைது செய்யப்பட்டது குறித்தும் அந்த மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
0 comments:
Post a Comment