Thursday, July 12, 2012

தூங்கிக் கொண்டே அரசை வழிநடத்துபவர்': வாஜ்பாய் குறித்து 'டைம்' சொன்னது மறந்து போச்சா? -ப.சி !


டெல்லி: மன்மோகன் சிங் ஒரு செயல்படாத பிரதமர் என்ற டைம் பத்திரிக்கையின் கருத்து தவறானது என்றும், இதைக் காரணம் காட்டி மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்ற பா.ஜ.கவின் கோரிக்கை ரசனையற்றது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.மேலும் 2002ம் ஆண்டு இதே டைம் பத்திரிக்கை அப்போதைய பாஜக பிரதமர் வாஜ்பாயை தூங்கும் பிரதமர் என்று கூறியதையும், அதை
அப்போது பாஜகவினர் கடுமையாக கண்டித்ததையும் சிதம்பரம் சுட்டிக் காட்டியுள்ளார்.
முன்னதாக இந்த மாதத்தின் டைம் பத்திரிக்கையின் ஆசியப் பதிப்பின் கவர் ஸ்டோரியாக மன்மோகன் சிங் இடம் பெற்றுள்ளார். 'The Underachiever - India needs a reboot' என்ற தலைப்பில் பிரதம்ர் மன்மோகன் சிங்கையும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசையும் அதில் விமர்சித்துள்ளனர்.
இந்தியாவில் பொருளாதார தாராளமயமாக்கலை செயல்படுத்தியவர் மன்மோகன். ஆனால் தற்போது அவர் இந்தியப் பொருளாதார வளர்ச்சியை ஆக்கப்பூர்வமான பாதைக்குத் திருப்ப உதவும் சீர்திருத்தங்களை செய்யத் தயங்குவதாக டைம் கூறியுள்ளது. இந்தியப் பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங் பொருத்தமானவர்தானா என்றும் டைம் கேட்டுள்ளது.
மேலும், பொருளாதார வளர்ச்சியில் காணப்படும் மந்த நிலை, பெருமளவில் நிலவும் நிதிப் பற்றாக்குறை, வீ்ழ்ந்து வரும் ரூபாயின் மதிப்பு, பெருகி வரும் ஊழல்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறார் மன்மோகன் சிங்.
அவரது அமைச்சர்களையே அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று தெரிகிறது. பல்வேறு முக்கியச் சட்டங்களை அவரால் நிறைவேற்ற முடியவில்லை. அனைத்தும் நாடாளுமன்றத்தில் தேங்கிக் கிடக்கின்றன என்று அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
மன்மோகன் பதவி விலக பாஜக கோரிக்கை:
இதைத் தொடர்ந்து மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க மூத்த தலைவரும் செய்தித் தொடர்பாளருமான ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
அவர் கூறுகையில், உலக அரங்கில் இந்தியா ஊழல் மிகுந்த நாடு என்ற மோசமான ரீதியில் பார்க்கப்படுகிறது. பிரதமருக்கு அரசியல் அதிகாரம் வழங்கியிருப்பது சோனியா காந்தி என்பதால் அவரும் இந்தப் பழியிலிருந்து தப்ப முடியாது. மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்றார்.
ப.சிதம்பரம் கடுமையான பதிலடி:
இதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நிருபர்களிடம் பேசுகையில், இப்போது டைம் பத்திரிகை எழுதியிருப்பதைச் சுட்டிக் காட்டும் பா.ஜ.கவினர் முன்பு இதே பத்திரிகை வாஜ்பாய் பற்றி எழுதியதையும் பார்க்க வேண்டும்.
2002-ம் ஜூன் மாதம் வெளிவந்த டைம் இதழில் அன்றைய பிரதமர் வாஜ்பாயின் நிர்வாகத்தைப் பற்றி எழுதும்போது "தூங்கிக் கொண்டே அரசை வழிநடத்துபவர்' என்று குறிப்பிட்டது. இதை அப்போது பாஜகவினர் கடுமையாக கண்டித்தனர்.
அந்தக் கட்டுரையை ரவிசங்கர் பிரசாத் வாசித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்போதாவது படிக்க வேண்டும்.
பிரதமர் பதவி விலக வேண்டும்' என்ற பா.ஜ.க.வின் கோரிக்கை ரசனையற்றது. பத்திரிகைகள் எழுதும் கட்டுரைகளை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
இப்போதுள்ள பொருளாதாரத் தேக்க நிலையிலிருந்து மீள்வதற்கு பிரதமர் தயாராவாரா என்று கேட்டால், நாம் இந்த நிலையிலிருந்து மீளுவோம் என்பதுதான் பதில். நாம் மீண்டும் உயர்ந்த அளவிலான வளர்ச்சிப் பாதையில் செல்வோம். அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இதுதான் டைம் பத்திரிகைக்குத் தரக் கூடிய பதில் என்றார் சிதம்பரம்.
மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் கமல்நாத் கூறுகையில், ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு பத்திரிகைக்கும் சொந்தமான கருத்துகள் உள்ளன. "டைம்' பத்திரிகை ஒரு புனித நூல் அல்ல. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் என்ன நடக்கிறது என்று முதலில் பார்த்த பின்னர்தான் இந்தியாவைப் பற்றிப் பேச வேண்டும் என்றார்.
thanks to asiananban

0 comments:

Post a Comment