Tuesday, July 31, 2012

சாலை விபத்தில் அதிரை சேர்ந்தவர்கள் 3 பேர் பலி! விக்கிரவாண்டி விபத்தில் பின்னணி.....?


விக்கிரவாண்டி:வெளிநாட்டில் பணி முடிந்து சந்தோஷமாய் திரும்பியவர்களின் பயணம்,  டிரைவரால் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே சோகத்தில் முடிந்தது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 55. தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கல கோட்டையைச் சேர்ந்தவர் உத்திராபதி, 45. திருச்சி அம்பிகாபுரத்தைச் சேர்ந்த காஜாஷெரீப், திருச்சி கருமண்டபம் அருகே உள்ள உத்தமபாளையத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், 33. இவர்கள் நான்கு பேரும் சவூதி அரேபியாவிலுள்ள ஜத்தா, துறைமுகத்தில் கஸ்டம்ஸ் அலுவலகத்திலுள்ள, "ரெட் சீ கேட் வே டெர்மினல்' கம்பெனியில் கான்ட் ராக்ட் அடிப்படையில் வேலை செய்தனர். பணி முடிந்து நேற்று முன் தினம் சந்தோஷமாக தாங்கள் சம்பாதித்த பொருட்களோடு தம் குடும்பத்தினரை பார்க்க வீடு திரும்பினர். இவர்களை வரவேற்க ஆறுமுகம் குடும்பத்தில் அவரது மனைவி முத்துலட்சுமி, மகன்கள் சரவணகுமார், கார்த்திக் ஆகியோர் டிராவல்சில் இருந்து குவாலிஸ் காரை வாடகைக்கு எடுத்துச் சென்றனர்.


இடைவிடாத பயணம்:காரை அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த ரியாஸ் அகமது, 22, என்பவர் ஓட்டிச் சென்றார். 27ம் தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்ட கார், 28ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தை அடைந்துள்ளது. மொத்தம் 450 கி.மீ., தூரம் பயணம் செய்த டிரைவர், ஓய்வு எடுக்காமல் விமானநிலையத்தைச் சுற்றி பார்த்துள்ளார். காலை 8 மணிக்கு சென்னை வந்தடைந்த சவூதி விமானத்தில், ஆறுமுகம் உள்ளிட்ட 4 பேரும் தங்கள் உடைமைகளைச் சரி பார்த்து காலை 10 மணிக்கு வெளியே வந்தனர். தாங்கள் கொண்டு வந்த பொருட்களைக் காரில் ஏற்றி கட்டியுள்ளனர்.


டிரைவர்:அப்போது தஞ்சாவூர் பகுதியிலிருந்து வந்திருந்த டிராவல்ஸ் டிரைவர்கள், குவாலிஸ் காரில் வந்த அனுபவமில்லாத டிரைவரை பார்த்தவுடன், "உன்னை யார் இவ்வளவு தூரம் இந்தச் சாலையில் வரச் சொன்னது' என கேட்டனர். அதற்கு, டிரைவர், "நான் சமாளித்து கொண்டு செல்வேன்' என கூறியுள்ளார். காலை 10.30 மணிக்கு 8 பேருடன் குவாலிஸ் கார், விமான நிலையத்திலிருந்து தஞ்சாவூரை நோக்கி புறப்பட்டது.பகல் 12.30 மணிக்கு கார் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலைக்கு வரும் போது, டிரைவரின் அஜாக்கிரதை காரணமாகவும், அதிவேகம் காரணமாகவும் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி, பின்னர் லாரியின் பின்னால் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் இறந்துள்ளனர்.



மரண பயணமானது :
தமிழகத்திலிருந்து பிழைப்பு தேடி தங்களது குடும்பத்தை விட்டு பிரிந்து, வெளிநாடு சென்று உழைத்து, நீண்ட இடைவெளிகளுக்குப் பிறகு சந்தோஷமாக வீடு திரும்பி, தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாய் இருக்கலாம் என பெரும் கனவுகளுடன் ஊர் திரும்புவர். இவர்களை அழைத்து வர, அனுபவமில்லாத டிரைவர்களை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்வதால் விபத்துகள் ஏற்பட்டு சந்தோஷமான பயணம் மரணப் பயணமாக மாறி விடுகிறது. டிராவல்ஸ் நிறுவனங்களும், நீண்ட தூரம் செல்லும் வண்டிகளுக்கு, அனுபவம் மிக்க ஓட்டுனர்களை அனுப்பி வைக்க வேண்டும். விபத்தில் இறந்தவரை நம்பி எத்தனையோ பேர் உள்ளனர். இதனை ஓட்டுனர்கள் நன்கு உணர்ந்து விதிமுறைகளை மீறாமல், அதிவேகத்துடன் செல்லாமல் வாகனங்களை ஓட்ட வேண்டும்.

0 comments:

Post a Comment