22 May 2013
அஹ்மதாபாத்:400 கோடி ரூபாய் ஊழல் தொடர்பான வழக்கில் குஜராத் மோடி அரசின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள புருஷோத்தம் சோலங்கி மீது விசாரணை நடத்த காந்தி நகர் சிறப்பு நீதிமன்றம் ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.ஆறு மாதத்திற்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் வழக்கு பதிவுச் செய்யுமாறு நீதிபதி ஜி.கே.உபாத்யாய தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.விசாரணையை ஊழல் ஒழிப்புத் துறையிடம் ஒப்படைக்குமாறு காந்தி நகர் போலீஸ் சூப்பிரண்டிற்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.இஷாக்மராடியா என்பவர் சோலங்கி மீது புகார் அளித்துள்ளார். மாநிலத்தின் 58 நீர் நிலைகளில் மீன் பிடிக்க சட்டவிரோதமாக ஒப்பந்தம் அளித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.அமைச்சரை விசாரணைச் செய்ய அனுமதி அளிக்குமாறு அரசுக்கு உத்தரவிடக்கோரி மராடியா உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்தார். இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் அமைச்சரவை மட்டத்தில் முடிவு எடுக்க மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால், அமைச்சரவை விசாரணைச் செய்ய அனுமதி அளிக்கவேண்டாம் என்பது மோடி அரசின் தீர்மானமாகும்.ஆனால், அமைச்சரவையின் தீர்மானத்தை மீறி ஆளுநர் கமலா பெனிவால் சோலங்கியை விசாரணைச் செய்ய அனுமதி வழங்கினார்.இதனைத் தொடர்ந்து மராடியா ஊழல் எதிர்ப்பு நீதிமன்றத்தை அணுகினார்.அமைச்சருக்கு எதிரான புகார் தொடர்பாக விசாரணைச் செய்ய ஊழல் எதிர்ப்பு நீதிமன்றம், 2012 ஆகஸ்ட் மாதம் மாவட்ட சூப்பிரண்டிற்கு உத்தரவிட்டது.2012 அக்டோபர் 6 ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் கோரியிருந்தது.
2009-ஆம் ஆண்டு இவ்வழக்கு தொடர்பான ஊழல் நடந்தது.அன்று மீன்வளத்துறை அமைச்சராக இருந்தவர் சோலங்கி.கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப் பெற்ற சோலங்கிக்கு மீண்டும் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது.இவ்வழக்கில் சி.பி.ஐ விசாரணைக் கோரி உயர்நீதிமன்றத்தை அணுக திட்டமிட்டிருந்தார் மராடியா.
0 comments:
Post a Comment