25 May 2013
லக்னோ:உத்தரபிரதேச மாநிலத்தில் விசாரணை கைதியாக இருந்த காலித் முஜாஹிதின் கஸ்டடி மரணத்தில் போலீஸின் போலி வேடம் குறித்தும், நீதிமன்றங்களின் அநீதங்களும் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன. முஜாஹிதின் மரணம் குறித்த போலீசின் அதிகாரப்பூர்வ விளக்கம் சரியென்றால், அவர் ஒரு அமானுஷ்ய மனிதராக இருக்கவேண்டும். அதிகாரப்பூர்வ விளக்கத்தின் படி 32 வயதான காலித் முஜாஹித், மதியம் 3.40க்கு உடல் சுகவீனம் ஏற்பட்டு பாரபங்கியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றார். அங்கு வைத்து அவர் மரணமடைந்ததாக உறுதிச் செய்யப்படுகிறது. பாராபங்கியில் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் எஸ்.மினிஸாதி மருத்துவமனைக்கு சென்றபோது இதனை உறுதிச் செய்துள்ளார். ஆனால், இச்சம்பவம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக 65 கி.மீ தொலைவில் உள்ள நீதிமன்றத்தில் காலித் முஜாஹித் விசாரணையை எதிர்கொண்டார் என்று அவரது வழக்கறிஞர் கூறுகிறார். முஜாஹித் நீதிமன்ற அறையை விட்டு 3.30க்கு வெளியே வந்தார். அவ்வாறெனில் 10 நிமிடங்களுக்குள் அவர் எவ்வாறு 65 கி.மீ தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு சென்றிருப்பார்? என்று வழக்கறிஞர் கேள்வி் எழுப்புகிறார்.
உத்தரபிரதேச சிறப்பு தீவிரவாத எதிர்ப்பு படை 2007-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலிதை கைதுச் செய்தது முதல் இத்தகைய முரண்பாடுகள் அவரது விவகாரத்தில் வெளிப்படுகின்றன. ஆனால், பொய் என நிரூபிக்கப்பட்ட வழக்கை தள்ளுபடிச் செய்வதற்கு பதிலாக முஜாஹிதிற்கு ஜாமீன் கூட வழங்காமல் நீதிமன்றங்கள் மறுப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
தன்னை சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு கொண்டு வந்த போலீஸ்காரர், போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்வோம் என்று மிரட்டியதை தனது கைப்பட புகாராக எழுதி காலித் முஜாஹித் நீதிபதியிடம் அளித்த பிறகும் நீதிபதி அதனை புறக்கணித்துவிட்டார். லக்னோவில் இருந்து 20 கி.மீ கிழக்கே உள்ள பாராபங்கி ரெயில்வே நிலையத்தில் வைத்து இரண்டு தீவிரவாதிகளை கைதுச் செய்ததாக 2007 டிசம்பர் 22-ஆம் தேதி போலீஸ் அறிவித்தது. லக்னோவில் இருந்து 250 கி.மீ தொலைவில் ஜோன்பூரில் மதரஸா(இஸ்லாமிய கல்வி நிலையம்) ஆசிரியராக இருந்த காலித் முஜாஹித் கைதுச் செய்யப்பட்டவர்களில் ஒருவராவார். ஜோன்பூருக்கு அருகே ஆஸம்கரைச் சார்ந்த யுனானி மருத்துவர் தாரிக் காஸ்மி கைதுச் செய்யப்பட்ட 2-வது நபர் ஆவார். 2007 நவம்பர் 22-ஆம் தேதி லக்னோவிலும், ஃபைஸாபாத்திலும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களுக்கு அருகே குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர்களிடமிருந்து வெடிப்பொருட்களை கைப்பற்றியதாகவும் போலீஸ் கூறியது. தேசத்துரோகம், தேசத்திற்கு எதிரான போர் ஆகிய பிரிவுகளில் இவர்கள் மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டது. ஆனால், முஜாஹிதின் உறவினர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் இணைந்து போலீஸ் ஜோடித்த பொய் வழக்கை தோலுரித்து காட்டியுள்ளனர்.
முஜாஹிதை போலீஸ் கைதுச் செய்ததாக கூறப்படும் தினத்திற்கு 6 நாட்களுக்கு முன்பே அதாவது 2007 டிசம்பர் 16-ஆம் தேதி மக்கள் நெரிசல் மிக்க மார்க்கெட்டில் வைத்து கைதுச் செய்ததாக அவர்கள் கூறுகின்றனர். காலித் முஜாஹிதின் கைது சம்பவம் அவரது சொந்த ஊரான மதியாஹுவில் எதிர்ப்பை கிளப்பியதுடன் இச்சம்பவம் உள்ளூர் பத்திரிகைகளில் செய்தியாக வெளியானது. உள்ளூர் போலீசாரிடமும் இதற்கான ஆவணங்கள் உள்ளன. ஆனால், இவற்றையெல்லாம் பரிசீலிக்காமல் ஜுடிஸியல் மாஜிஸ்ட்ரேட் போலீஸ் கூறிய பொய்களை அச்சு பிசகாமல் ஏற்றுக்கொண்டார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படியும் முஜாஹிதின் சொந்த ஊரில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் அளித்த மனுவில் அவரை கைதுச் செய்தது டிசம்பர் 16 என்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதனை உபயோகித்து பாராபங்கி, லக்னோ, பைஸாபாத் ஆகிய விசாரணை நீதிமன்றங்களில் முஜாஹித் மனு அளித்தார். ஆனால், அரசு தரப்பு வாதத்தை முடிக்கும் முன்பு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஆவணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று 2009-ஆம் ஆண்டு நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. ஆனால், 2013-ஆம் ஆண்டிலும் அரசு தரப்பு வாதத்தை நீதிமன்றம் கேட்பது முடிவுறவில்லை. இதனைத் தொடர்ந்து எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்து ஜாமீன் கிடைக்குமா? எதிர்பார்த்தனர். போலீஸ் கூற்றுக்களில் முரண்பாடுகள் தெளிவானபிறகும், கடுமையான குற்றங்களை முஜாஹித் புரிந்ததாக சுட்டிக்காட்டி நீதிமன்றம் ஜாமீன் மனுவை நிராகரித்துவிட்டது.
மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் கடுமையான அழுத்தத்தை தொடர்ந்து அகிலேஷ் யாதவ் அரசு இம்மாதம் 3-ஆம் தேதி முஜாஹித் மற்றும் காஸ்மிக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறக் கோரி பாராபங்கியில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தை அணுகியது. ஆனால், பாராபங்கி கூடுதல் அமர்வு நீதிபதி கல்பனா மிஸ்ரா அரசின் கோரிக்கையை கூட நிராகரித்துவிட்டார். ஒரு சில உள்ளூர் வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்று அவர் அரசின் மனுவை நிராகரித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் அனுதாபிகளான வழக்கறிஞர்கள் தாம் இம்மனுவை அளித்தனர் என்று காலித் முஜாஹிதின் வழக்கறிஞர் சுமன் கூறுகிறார். எதிர்தரப்பு ஆஜராகாத வேளையில் தனது சேம்பரில் வைத்து வாதம் கேட்ட பிறகு நீதிபதி உத்தரவிட்டதாக சுமன் கூறுகிறார். ஆனால், சூழ்நிலை முஜாஹித் மற்றும் தாரிக் காஸ்மியின் விடுதலைக்கு உகந்ததாக மாறியது. இதுவே அவரது மரணத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. முஜாஹித் விடுதலையானால், தங்களது போலி வேடம் அம்பலமாகும் என்று போலீஸ் அச்சமடைந்ததே முஜாஹிதின் மரணத்திற்கு காரணம் என்று உறவினர்கள் கூறுகின்றனர்.
முஜாஹிதையும், காஸ்மியையும் சட்டவிரோதமாக கைது செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து முந்தைய உ.பி மாயாவதி அரசு இதனைக்குறித்து விசாரிக்க ஓய்வுப் பெற்ற நீதிபதி ஆர்.டி.நிமேஷை நியமித்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.ஆனால், அந்த அறிக்கையை அகிலேஷ் யாதவ் அரசு வெளியிடவில்லை. இவ்வறிக்கையில் முஜாஹித் மற்றும் தாரிக் காஸ்மியை கைது செய்த போலீஸ் அதிகாரிகள் மீது கடுமையான விமர்சனங்கள் கூறப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. கைது நடவடிக்கை சட்டவிரோதம் என்று நிமேஷ் கமிஷன் கூறியது வெளியானது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டாக்டர் தாரிக் காஸ்மி, கஷ்மீரைச் சார்ந்த ஸஜ்ஜாதுர்ரஹ்மான், அக்தர் ஆகியோரின் உயிருக்கான பாதுகாப்புக் குறித்து மனித உரிமை ஆர்வலர்களும், வழக்கறிஞர்களும் கவலை தெரிவித்துள்ளனர். பாராபங்கி நீதிமன்றத்தில் இவ்வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணை மே மாதம் 31-ஆம் தேதி நடைபெற உள்ளது.
0 comments:
Post a Comment