Thursday, May 16, 2013

முஸ்லிம்கள் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை நிறுவ மாநிலங்களுக்கு உத்தரவு!

                         16 May 2013 shinde
 
     புதுடெல்லி:முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாத குற்றம் சுமத்தி கைதுச் செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை நிறுவுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
 
      இத்தகைய வழக்குகளில் எத்தனை முஸ்லிம்கள் எத்தனை ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை கண்டறியவும் மாநிலங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஷிண்டே கூறினார்.’உண்மைகளை கண்டறிய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது . அதற்கு கால அவகாசம் தேவைப்படும்’ என்று ஷிண்டே மேலும் கூறினார்.
 
     தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரணைச் செய்ய தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) சட்டப்படி இந்தியாவில் 39 சிறப்பு நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் முன்னர் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பான வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்களை சிக்க வைத்து நாட்டின் பல்வேறு சிறைகளில் அடைத்துள்ளதாக மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ரஹ்மான் கான் தனது கவலையி ஷிண்டேவிடம் தெரிவித்திருந்தார். சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம்(யு.ஏ.பி.ஏ) சிறுபான்மை மக்களுக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும், தீவிரவாதம் தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் விசாரணை நடத்தி வேகமாக தீர்ப்பளிக்க சிறப்பு நீதிமன்றங்களை நிறுவவேண்டும் என்றும் ரஹ்மான் கான் அறிவுறுத்தியிருந்தார்.
 
    இவ்விவகாரம் தொடர்பாக பரிசீலிப்போம் என்று ஷிண்டே, ரஹ்மான் கானுக்கு உறுதி அளித்திருந்தார்.

0 comments:

Post a Comment