Friday, May 3, 2013

கர்நாடகா:பா.ஜ.க ஆட்சியில் இயற்கை வளம் கொள்ளை, மத நல்லிணக்கம் சீர்குலைவு!-சோனியா கடும் தாக்கு!

                             3 May 2013 SONIA_GANDHI_10651931
 
     பெங்களூர்:கர்நாடகா மாநிலத்தில் உள்ள இயற்கை வளத்தை பா.ஜ.க கொள்ளையடித்துள்ளதாகவும் மத நல்லிணக்கத்தைப் பேணுவதற்குப் பதிலாக, குறுகிய நோக்கங்களுக்காக மக்கள் மத்தியில் மதம், ஜாதிய உணர்வுகளை பாஜக அரசு தூண்டியதாகவும் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
 
     கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, குல்பர்காவில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுகையில், அவர் பேசியது:பாஜக ஆட்சியில் கர்நாடகத்தின் வளர்ச்சி முடங்கியுள்ளது. மாநிலத்தில் உள்ள கனிமவளங்களைக் கொள்ளை அடிக்க அனுமதித்ததன் மூலம், இயற்கை வளங்களை பாஜக அரசு சீரழித்துள்ளது.
 
     பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக, கர்நாடகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிதியை பாஜக அரசு முறையாக பயன்படுத்தவில்லை. கடந்த 5 ஆண்டுகளில், கர்நாடகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்த ரூ.80 ஆயிரம் கோடி என்ன ஆனது என்பது தெரியவில்லை. இந்த நிதிக்கு பாஜக அரசு கணக்கு காட்ட வேண்டும்.
 
      வேலை உறுதித் திட்டத்தின் கீழ், கர்நாடகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பாஜக அரசு முறையாகப் பயன்படுத்தாததால், வேலை தேடி வேறு ஊர்களுக்கு பொதுமக்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினரின் உரிமைகளைக் காக்கவும், விவசாயிகளை பல்வேறு பிரச்னைகளிலிருந்து மீட்கவும் மத்திய அரசு உறுதியான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதற்கு மாறாக, கர்நாடகத்தின் வளத்தை பாஜக அரசு கொள்ளை அடித்துள்ளது.
 
      சூஃபி, பசவண்ணர் போன்றோர் பிறந்த கர்நாடகத்தில் மதக் கலவரத்திற்கு இடம் கொடுக்கலாமா? மத நல்லிணக்கத்தைப் பேணுவதற்குப் பதிலாக, குறுகிய நோக்கங்களுக்காக மக்கள் மத்தியில் மதம், ஜாதிய உணர்வுகளை பாஜக அரசு தூண்டியது. காங்கிரஸ் கட்சிக்கு எப்போதும் மத நல்லிணக்கத்தில் நம்பிக்கை உண்டு. மேலும், மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் சக்தியை அடக்குவதில் காங்கிரஸ் உறுதியாக இருந்து வருகிறது. ஜாதி, மதம், இனத்தின் அடிப்படையில் யாரையும் காங்கிரஸ் கட்சியினர் வேறுபடுத்திப் பார்த்தது கிடையாது.
 
     நாம் அனைவரும் இந்திய நாட்டின் குடிமக்கள் என்பதே காங்கிரஸ் கட்சியின் கொள்கை. கல்வி, வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில், ஹைதராபாத்-கர்நாடகப் பகுதிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 371-ஐ திருத்தியமைத்துள்ளோம். கர்நாடகத்தின் இழந்த பெருமையை மீண்டும் மீட்டெடுக்கவும், தூய்மையான, நிலையான ஆட்சியை வழங்கவும் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார் சோனியா.

0 comments:

Post a Comment