Friday, May 3, 2013

கருணை மனு மீது தாமதமாக முடிவு:தூக்குத் தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

2 May 2013
புதுடெல்லி:கருணை மனு மீது முடிவு எடுக்க தாமதம் ஏற்பட்டதன் காரணமாக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவருக்கு ஆயுள்தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் நேற்று(புதன் கிழமை) தீர்ப்பளித்துள்ளது.
 
அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்த இரட்டைக் கொலை வழக்கு ஒன்றில் சரணடைந்த எம்.என். தாஸ் என்பவருக்கு 1997-ஆம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 1998-ஆம் ஆண்டு குவாஹாட்டி உயர்நீதிமன்றமும் 1999-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றமும் இந்த தூக்கு தண்டனையை உறுதி செய்தன. இதைத் தொடர்ந்து 1999-ஆம் ஆண்டு எம்.என்.தாஸ் தன்னுடைய தண்டனையைக் குறைக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். இந்த மனுவை 2011-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவராக இருந்த பிரதீபா பாட்டீல் நிராகரித்தார். தனது கருணை மனுவை 12 ஆண்டு காலம் கழித்து தாமதமாக நிராகரித்ததால் தன்னுடைய தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் எம்.என்.தாஸ் மனு தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த வழக்கை ஜி.எஸ். சிங்வி தலைமையிலான அமர்வு நீதிமன்றம் புதன்கிழமை விசாரித்தது. எம்.என்.தாஸின் கருணை மனுவை காலதாமதமாக குடியரசுத் தலைவர் நிராகரித்ததால் தாஸின் தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றுவதாக தீர்ப்பளித்தது. அண்மையில் காலிஸ்தான் இயக்க தலைவர் தேவேந்தர் சிங் புல்லரின் வழக்கில், தண்டனை குறைப்புக்கு கருணை மனு தாமதமாக நிராகரிக்கப்படுவதை காரணமாக ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பு கருணை மனு தாமதமாக நிராகரிக்கப்பட்டு தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் கைதிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
 
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ஆசிய மனித உரிமைகளுக்கான மையம் வரவேற்றுள்ளது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, நாட்டில் மரண தண்டனையை முற்றிலும் ஒழிப்பதற்கு முன்னோடியாக அமைந்துள்ளது. மரண தண்டனை என்பது நீதியை நிலைநாட்டுவதற்கான ஒரே வழி அல்ல என அந்த மையத்தின் இயக்குநர் சுஹாஸ் சக்மா தெரிவித்துள்ளார்.
 
மேலும் இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் காலிஸ்தான் இயக்க தேவேந்தர் சிங் புல்லரின் தூக்கு தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு இந்த மனித உரிமைகள் மையம் கருணை மனு அனுப்பியுள்ளது. அதேவேளையில் கருணை மனு மீது காலதாமதமாக முடிவெடுக்கப்பட்டு அரசியல் சாசனம் வழங்கிய மீளாய்வுச் செய்யும் உரிமையும் மறுக்கப்பட்டு குடும்பத்திற்கு கூட தெரிவிக்காமல் அநியாயமாக தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்ட அப்பாவி கஷ்மீர் இளைஞர் அப்ஸல் குருவுக்கு இந்திய அரசு மிகக்கடுமையான அநீதியை இழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment