18 May 2013
ஜெய்ப்பூர்:பாகிஸ்தான் நாட்டின் உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐக்கு இந்திய ராணுவத்தின் முக்கிய தகவல்களை அளித்த குற்றச்சாட்டின் பேரில் ராணுவத்தில் பணியாற்றும் ஊழியரான பி.கே.சின்ஹா கைதுச் செய்யப்பட்டுள்ளார். சின்ஹா, தென்மேற்குப் பகுதி படைப்பிரிவில் ராணுவ வீரர்களுக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட பொருள்கள் சப்ளை செய்யும் பிரிவில் எழுத்தராகப் பணி புரிந்து வருகிறார். அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த சின்ஹா, இந்திய ராணுவத்தின் நடமாட்டம் உள்ளிட்ட முக்கியமான தகவல்கள் மற்றும் ஆவணங்களை நேபாளத்தில் செயல்படும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பிரிவிடம் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 15-ம் தேதி அலுவலக ரகசியச் சட்டத்தின் கீழ் சின்ஹா கைது செய்யப்பட்டார். இப்போது அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று போலீஸ் உயரதிகாரி தல்பத் சிங் தின்கர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இது குறித்து தின்கர் மேலும் கூறுகையில், “சின்ஹா, 4 முறை நேபாளத் தலைநகர் காத்மாண்டுவுக்கு பயணித்து, ஐஎஸ்ஐ முகவரிடம் முக்கியமான தகவல்களை அளித்துள்ளார். உளவு பார்த்ததற்காக அவருக்கு இந்தியா மற்றும் நேபாள ரூபாய்கள் அளிக்கப்பட்டுள்ளன. இத்தொகை எவ்வளவு என்று உறுதியாகக் கூற முடியாது. ராஜஸ்தான் மாநிலம், ஜோத்வாராவில் உள்ள அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன’ என்றார்.
போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சின்ஹாவிடம் உளவுத்துறையினர் விசாரித்து வருகின்றனர். ராணுவ செய்தித் தொடர்பாளர் எஸ்.டி.கோஸ்வாமி கூறுகையில், “இந்த வழக்கு தொடர்பாக போலீஸாருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ராணுவம் புரியும். சின்ஹா, ராணுவத்தில் எழுத்தராகப் பணிபுரிவதால் அவர் மீது ராணுவச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது’ என்றார். சின்ஹா, 1995-ம் ஆண்டு கீழ்நிலை எழுத்தராக பணியில் இணைந்தார். இதைத் தொடர்ந்து 2000-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை மேற்கு வங்க மாநிலம், சிலிகுரியில் பணிபுரிந்தார். அப்போது அவருக்கு முன்னாள் ராணுவ வீரர் ஒருவருடன் தொடர்பு கிடைத்தது. இவர், நேபாளத்தில் உள்ள ஐஎஸ்ஐ முகவரிடம் சின்ஹாவை அறிமுகப்படுத்தியுள்ளார்.
0 comments:
Post a Comment