25 May 2013
மத்தியில் 10 சதவீதம் மாநிலத்தில் 7 சதவீதம் முஸ்லீம்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி, பல்லாவரத்தில் மே 26 அன்று சமூக நீதி மாநாடுஎஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் அறிவிப்பு!
தேசிய அளவில் முஸ்லீம்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி கடந்த ஏப்ரல் 14 ,2013 முதல் ஏப்ரல் 14, 2014 வரை எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்தும் தேசிய அளவிலான பிரச்சாரத்தில் ஒரு பகுதியாக வருகிற 26 ஆம் தேதியன்று காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரத்தில் முஸ்லீம்களுக்கு மத்தியிலும், மாநிலத்திலும் தனி இடஒதுக்கீடு கோரி மாபெரும் சமூக நீதி மாநாடு நடைபெறுகிறது.
நம் நாட்டில் வாழும் முஸ்லீம்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பின்தங்கியுள்ளனர் என்பது மத்திய அரசு அமைத்த நீதிபதி ராஜேந்திர சச்சார் கமிட்டி மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி அறிக்கைகளின் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிலையை மாற்ற மத்திய அளவில் கல்வி வேலைவாய்ப்புகளில் முஸ்லீம்களுக்கு 10 சதவீத தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என பரிந்துரையும் செய்தது. அந்த பரிந்துரையின் மீது மத்திய அரசு எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழகத்தை பொருத்தவரை முஸ்லீம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு அமலில் இருந்தாலும் இது தமிழகத்தில் வாழும் 7 சதவீத முஸ்லீம்களுக்கு போதுமானதல்ல. மேலும் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, தற்போதைய தமிழக முதல்வர் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை உயர்த்த பரிசீலனை செய்வோம் என அறிவித்தார். ஆனால் இதுவரை அதற்கான எந்த முயற்சியும் அ.தி.மு.க அரசு எடுக்கவில்லை. எனவே மத்தியில் 10 சதவீத இடஒதுக்கீடையும், மாநிலத்தில் 7 சதவீத இடஒதுக்கீட்டையும் உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையோடு எஸ்.டி.பி.ஐ கட்சி மே 26 அன்று பல்லாவரம் ஆடுதொட்டி மைதானத்தில் சமூக நீதி மாநாட்டை நடத்துகிறது.
மாநாட்டு திடலுக்கு கண்ணியமிகு காயிதே மில்லத் திடல் எனவும், நுழைவாயிலுக்கு சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் நுழைவாயில் எனவும் பெயரிடப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு மாவட்ட துணைத்தலைவர் அன்சாரி, கொடியேற்றி வைக்கிறார். மாநாட்டின் எழுச்சி பேரணி மாலை 3 மணி அளவில் பல்லாவரம் கிரீன் மஸ்ஜித் அருகில் தொடங்கி 5 மணி அளவில் மாநாட்டு திடலை அடைகிறது. பேரணியை மாநில செயலாளர் வி.எம் ரத்தினம் அவர்கள் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். மாநாட்டிற்கு தலைவராக காஞ்சி மாவட்ட தலைவர் முகமது பிலால் அவர்கள் தலைமையேற்கிறார். இந்நிகழ்ச்சிக்கு மாநில செயலாளர் அமீர் ஹம்சா வரவேற்புரையாற்றுகிறார். மேலும் எஸ்.டி.பி. கட்சியின் வடசென்னை, தென் சென்னை,மத்திய சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டத்தின் நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர்.
மேலும் சிறப்பு அழைப்பாளராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ் இஸ்மாயில் அவர்களும், தமிழக முஸ்லீம் இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹனிபா அவர்களும், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் அமானுல்லா அவர்களும், வாழ்த்துரை வழங்குகின்றனர். மேலும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத்தலைவர் தெஹ்லான் பாகவி மற்றும் துணைத்தலைவர் எஸ்.எம் ரபீக் அஹ்மத், மற்றும் மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக், கர்நாடக மாநில தலைவர் கே.எச் அப்துல் மஜீத் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். இறுதியாக வரலாற்று சிறப்பு மிகுந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, நிகழ்ச்சியின் நன்றியுரையை மாவட்ட பொதுச் செயலாளர் அபூபக்கர் சித்திக், ஆற்றுகிறார். பல்லாயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டிற்கு சமூக நீதி போராளிகள் அலைகடலென திரண்டு ஆதரவு தர வேண்டும் என்று மாநில பொதுச் செயலாளர் நெல்லை முபாரக் அவர்கள் கேட்டுக் கொண்டார்.
0 comments:
Post a Comment