18 May 2013
புவனேஷ்வர்:ஆஸ்திரேலியாவைச் சார்ந்த கிறிஸ்தவ பாதிரியார் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவரது இரு மகன்கள் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒடிசா மாநிலம், கியோன்ஜர் மாவட்டத்தில் உள்ள அனந்தபூரில் கன்ஷியாம் மஹந்தா மற்றும் ராம்ஜன் மஹந்தா ஆகியோர் சிபிஐ அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரி அபய் சங்கர் கர் தெரிவித்தார். “கைது செய்யப்பட்டவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும், விரைவில் அவர்கள் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர்’ என்றும்சிபிஐ அதிகாரி பிரதான் தெரிவித்தார். கியோன்ஜர் மாவட்டத்தில் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவரது இரு மகன்கள் பிலிப், திமோதி ஆகியோர் தூங்கிக் கொண்டிருக்கையில் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர். இந்த கொடூரச் சம்பவம் 1999-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி நிகழ்ந்தது. இது தொடர்பாக பஜ்ரங் தளம் உறுப்பினர் தாரா சிங் மற்றும் 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையைத் தொடர்ந்து, தாரா சிங்குக்கு மரண தண்டனையும், 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து சிறப்பு நீதிமன்றம் 2003-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஒடிசா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. உயர் நீதிமன்றம் 2005-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில், தாரா சிங்குக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையானது, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 12 பேரில் 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர். உயர் நீதிமன்றம் வழங்கிய இத்தீர்ப்பை உச்ச நீதிமன்றம் 2011-ம் ஆண்டு உறுதி செய்தது.
0 comments:
Post a Comment