Monday, May 20, 2013

அஜ்மானில் சிறப்பாக நடைபெற்ற FOSTA 2013! டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) பங்கேற்பு!!

20 May 2013
 
     எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் (EIFF) ஏற்பாடு செய்த FOSTA 2013 என்ற குடும்பங்களின் இனிய சங்கம நிகழ்ச்சி கடந்த மே 17 வெள்ளியன்று அஜ்மானிலுள்ள இண்டர்நேஷனல் இந்தியன் ஸ்கூலில் சிறப்பாக நடைபெற்றது. காலை 10 மணியளவில் மாணவ மாணவியருக்கான போட்டிகள் துவங்கின. முன்னதாக அறிவித்தபடி 1 முதல் 3ம் வகுப்பு மாணவ மாணவியருக்கு Painting/Clay Modeling போட்டி நடந்தது. 4 முதல் 6ம் வகுப்பு மாணவ மாணவியருக்கு வினாடி வினா (Quiz) போட்டி நடைபெற்றது. 7 முதல் 9ம் வகுப்பு மாணவ மாணவியருக்கு Collage போட்டி நடைபெற்றது. 10 முதல் 12ம் வகுப்பு மாணவ மாணவியருக்கு பேச்சுப் போட்டி (Elocution) நடைபெற்றது. இதல்லாமல் அனைவருக்குமாக 3 நிமிட குறும்படப் போட்டியும் (3-Minute Short Film Contest) நடைபெற்றது. அனைத்துப் போட்டிகளிலும் மாணவ மாணவியர் ஆர்வமாகப் பங்கு பெற்றனர். மாணவர்களுக்குள் எவ்வளவு திறமைகள் அமுங்கிக் கிடக்கின்றன என்பதை ஒவ்வொரு போட்டியின் படைப்புகளும் எடுத்தியம்பின. குறிப்பாக மாணவர்கள் படைத்த 3 நிமிட குறும்படங்களைக் கூற வேண்டும். மொத்தம் 7 படைப்புகள் போட்டியில் கலந்துகொண்டன. அத்தனையும் தரமான படைப்புகள். மாணவ மாணவியருள் எவ்வளவு படைப்புத்திறன் ஒளிந்துள்ளது என்பதை அவை வெளிச்சம் போட்டுக் காட்டின.
Painting/Clay Modeling போட்டியின் நடுவராக இருந்த சகோ. முஹம்மத் அவர்கள் சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்தார். வினாடி வினா போட்டியை கவுன்சலிங் நிபுணரும், சமூக சேவகருமான இப்றாஹீம் அவர்கள் மிக அழகாக நடத்தினார். Collage போட்டிக்கும், 3 நிமிட குறும்படப் போட்டிக்கும் மீம் மீடியா நிறுவன வடிவமைப்பு மேலாளர் ஷாஜஹான் அவர்கள் நடுவராக இருந்து சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்தார். பேச்சுப் போட்டிக்கு ஆடிட்டர் ஹஸன் அவர்களும், பொறியாளர் தமீம் அவர்களும் நடுவராக இருந்து சிறந்த பேச்சாளர்களைத் தேர்ந்தெடுத்தனர். ஜும்ஆ இடைவேளைக்குப் பிறகு அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. அதன் பின்னர் பெற்றோருக்கும், மாணவ மாணவியருக்கும் பயனுள்ள வகுப்புகள் துவங்கின. மாணவ மாணவியருக்கு A+ Vibgyor of Life (வாழ்க்கையின் வானவில்) என்ற வகுப்பு நடைபெற்றது. இதனை அபுதாபி முஸஃப்பாவிலுள்ள இந்தியன் மாடல் ஸ்கூலின் துணைத் தலைமையாசிரியர் மாஸ்டர் கே.வி. அப்துர் ரஷீத் அவர்கள் அழகுற நடத்தினார். மாணவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கு வெளிச்சம் தரக்கூடியதாக அந்த நிகழ்வு அமைந்தது. 3 மணி நேரம் நடந்த இந்நிகழ்ச்சி முழுவதையும் மாணவ மாணவியர் சிறிதும் தளர்ச்சியடையாமல் மிக்க ஆர்வத்துடன் கவனித்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் பிறிதொரு அரங்கில் பெற்றோர்களுக்கு Parenting வகுப்பு நடைபெற்றது. கவுன்சலிங் நிபுணரும், சமூக சேவகருமான சகோ. இப்றாஹீம் அவர்கள் இதனை நடத்தினார். குழந்தைகளைச் சிறப்பாக வளர்ப்பதற்கு நல்ல பல ஆலோசனைகளை அவர் வழங்கினார். அதன் பிறகு பிரபல உளவியல் மருத்துவ நிபுணர் டாக்டர் அப்துல்லாஹ் என்ற பெரியார்தாசன் சிறப்புரையாற்றினார். Stress Management குறித்து மிக விளக்கமாக எளிய முறையில் அவர் உரையாற்றியது அனைவரையும் கவர்ந்தது. கலந்துகொண்டவர்கள் கேட்ட பல சந்தேகங்களுக்கு அவர் பதிலளித்தார்.
 
     இறுதியாக, பரிசளிப்பு விழா மாலை 5.30 மணியளவில் துவங்கியது. சகோ. M.S. அப்துல் ஹமீது அவர்கள் வரவேற்புரையாற்றினார். EIFF பற்றிய அறிமுகவுரையை பொறியாளர் தமீம் அவர்கள் வழங்கினார். அதன்பிறகு சிறந்த குறும்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரமீஸ் என்ற மாணவர் படைத்த REWIND என்ற குறும்படம் திரையிடப்பட்டது. பின்னர் பரிசளிப்பு நிகழ்ச்சி துவங்கியது. சகோ. முனவ்வர் அவர்கள் பரிசு பெற்றவர்களின் விவரங்களை அறிவித்தார். டாக்டர் அப்துல்லாஹ் என்ற பெரியார்தாசன், மாஸ்டர் கே.வி. அப்துர் ரஷீத், பொறியாளர் தமீம், சகோ. M.S. அப்துல் ஹமீது ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளை வழங்கினர். பேச்சுப் போட்டியில் பங்கெடுத்த ஃபலஸ்தீனைச் சேர்ந்த ஃபராஹ் ஜமால் குர்தி என்ற மாணவி ஃபலஸ்தீன் குறித்து உருக்கமாகப் பேசியது அனைவரையும் நெகிழச் செய்தது. அவரே பேச்சுப் போட்டியின் முதல் பரிசையும் தட்டிச் சென்றார். இரண்டாவது பரிசை அஜித் ராய் பெற்றார். Painting போட்டியில் முதல் பரிசை ஆதித்யா A. என்பவரும், இரண்டாவது பரிசை காயத்ரி சோனால் நாயர் என்பவரும் தட்டிச் சென்றனர். வினாடி வினா போட்டியில் முதல் பரிசை சூர்யா ரமேஷ் என்பவரும், இரண்டாவது பரிசை சாண்டோ டோஜி என்பவரும் தட்டிச் சென்றனர். Collage போட்டியில் முதல் பரிசை சானியா சஞ்சீவ் என்பவரும், இரண்டாவது பரிசை கலீல் அஜ்மல் என்பவரும் தட்டிச் சென்றனர். சிறந்த 3 நிமிட குறும்படப் போட்டியில் முதல் பரிசை ரமீஸ் என்பவரும், இரண்டாவது பரிசை முஹம்மத் ஷாஃபி என்பவரும் தட்டிச் சென்றனர். முதல் பரிசாக 8 கிராம் தங்க நாணயமும், இரண்டாவது பரிசாக 4 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டன. இந்தத் தங்க நாணயங்கள் அனைத்தையும் அல் ஹசீனா ஜூவல்லர்ஸ் நிறுவனத்தார் மனமுவந்து அனுசரனை (Sponsorship) வழங்கினர். இவையல்லாமல் மூன்றாவது இடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு Antics Land, Dyna Trade, Pizzaro ஆகிய நிறுவனங்கள் அனுசரனை வழங்கிய கிஃப்ட் வவுச்சர்கள் ஆறுதல் பரிசுகளாக வழங்கப்பட்டன. இறுதியாக சகோ. முனவ்வர் அவர்கள் நன்றி நவில நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

0 comments:

Post a Comment