3 May 2013
எல்லையில் ஊடுறுவல் பிரச்சனை தொடர்பாக நடத்தப்பட்ட மூன்றாவது கட்ட கொடி அமர்வு கூட்டம் தோல்வி அடைந்த நிலையில், லடாக்கை விட்டு வெளியேற வேண்டுமானால் ராணுவ நடவடிக்கையை இந்தியா கைவிட வேண்டும் என சீனா நிபந்தனை விதித்துள்ளது.
கஷ்மீர் மாநிலத்தின் வடகிழக்கு லடாக் பகுதியில் கடந்த மாதம் சீன ராணுவம் திடீரென ஊடுருவி, 19 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆக்கிரமித்து 5 கூடாரம் அமைத்தனர். அவர்கள் லடாக் நோக்கி மேலும் முன்னேறாமல் இருக்க இந்திய ராணுவம் அங்கு குவிக்கப்பட்டுள்ளது.
ஊடுருவிய பகுதியை விட்டு உடனடியாக வெளியேற சீனாவுக்கு இந்தியா வைத்த கோரிக்கையை அந்நாடு கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து இந்தியா- சீனா ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு வார்த்தை நடந்தது. 2 முறை நடந்த கொடி அமர்வு கூட்டம் தோல்வி அடைந்த நிலையில் நேற்று இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் லடாக் அருகே மூன்றாவது முறையாக சந்தித்து பேச்சு நடத்தினர்.
19 கிலோ மீட்டர் தொலைவுக்கு தேவை இல்லாமல் சீன ராணுவம் வந்து இருப்பதாக இந்திய ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த சீனா, தாங்கள் இருக்கும் பகுதி, சீனாவின் எல்லைக்குட்பட்டது என்றனர். இதனால் நேற்று நடந்த 3வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. இது இந்திய ராணுவ உயர் அதிகாரிகளுக்கு ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் கொடுத்துள்ளது.
சீனாவின் நிபந்தனை: லடாக் எல்லையில் ஆக்கிரமித்த பகுதியில் இருந்து திரும்பி செல்ல மறுக்கும் சீன ராணுவத்தினர் நேற்று பேச்சு வார்த்தையின் போது இந்தியாவிடம் சில நிபந்தனைகளை விதித்தனர்.
‘லடாக் எல்லையில் நிரந்தர கண்காணிப்பு கூடாரத்தை இந்தியா கட்டக்கூடாது, பக்சி, சுமர் செக்டார்களில் இந்தியா கட்டியுள்ள எல்லையோர கூடாரங்களை உடனே பிரித்து விட வேண்டும், சீன படைகளை நோக்கி இந்தியாவின் எந்த கூடாரமும் இருக்க கூடாது, தற்போது இருக்கும் பகுதியில் இருந்து இந்தியா முதலில் பின்வாங்கி செல்ல வேண்டும், கண்காணிப்பு பணியிலும் ஈடுபடக்கூடாது’ என்று சீனா நிபந்தனை விதித்தது.
அதோடு, பிஜீங்கில் இருந்து உத்தரவு வரும் வரை தற்போது முகாமிட்டுள்ள இடத்தில் இருந்து நகரமாட்டோம் என்றும் சீனா ராணுவம் திட்டவட்டமாக கூறிவிட்டது. இதன் மூலம் லடாக் எல்லையில் ஆக்கிரமித்த பகுதியில் இருந்து சீனா வெளியேறாது என்று தெரிகிறது. இதனால் இந்திய ராணுவ வீரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
0 comments:
Post a Comment