Thursday, May 16, 2013

மருமகள் வேலைக்காரி அல்ல – உச்சநீதிமன்றம்!

                     16 May 2013 indian-supreme-court
 
     புதுடெல்லி:மருமகள் என்பவர் ஒரு குடும்ப உறுப்பினராக நடத்தப்பட வேண்டுமே தவிர, வேலைக்காரியைப் போல் நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
     மனைவியைத் தொடர் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி அவர் தற்கொலை செய்வதற்குக் காரணமாக அமைந்த கணவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராமச்சந்திரன், தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
 
      இவ்வழக்கில், கணவருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறைத் தண்டனையை நீதிபதிகள் உறுதிப்படுத்தினர். அப்போது, அவர்கள் கூறியதாவது: வரதட்சிணைக்காகவோ வேறு காரணங்களுக்காகவோ, மருமகள்கள் தீ வைத்துக் கொளுத்தப்படுவது அல்லது உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தப்படுவது போன்றவை மிகவும் கவலை அளிக்கக் கூடியதும் வெட்ககரமானதும் ஆகும். ஒரு மருமகள், புகுந்த வீட்டில் மதிக்கப்படவேண்டும். ஆனால் சில நேரங்களில் கணவராலும், அவரது குடும்பத்தினராலும் மருமகள்கள் நடத்தப்படும் விதத்தைக் கண்டு சமூகமே அதிர்ச்சியில் உறைந்து போகிறது.
 
     மருமகள் என்பவர் அன்புடனும் பாசத்துடனும் ஒரு குடும்ப உறுப்பினராக நடத்தப்பட வேண்டும். அவரை அன்னியரைப் போல் அலட்சியத்துடன் நடத்தக் கூடாது. வேலைக்காரியைப் போலும் நடத்தக் கூடாது. புகுந்த வீட்டை விட்டு அவர் எந்த நேரமும் துரத்தி அடிக்கப்படலாம் என்ற நிலைமை ஏற்படுத்தப்படக் கூடாது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment