19 May 2013
புதுடெல்லி:ஒன்பது பேர் கொல்லப்பட்டு, 58 பேர் காயமடைய காரணமான ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு நிகழ்ந்து 6 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளன.ஆனால், இக்குண்டுவெடிப்புக்கு சதித்திட்டம் தீட்டிய முக்கிய சூத்திரதாரிகளான சந்தீப் டாங்கே, ராம்ஜி கல்சங்கரா, சுரேஷ் நாயர் ஆகிய ஹிந்துத்துவா பயங்கரவாதிகளை இன்னமும் தலைமறைவாகவே உள்ளனர். அவர்களைகைதுச் செய்ய புலனாய்வு ஏஜன்சிகளால் இதுவரை முடியவில்லை.
முன்னாள் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரான லோகேஷ் சர்மா, தேவேந்தர் குப்தா, சுவாமி அஸிமானந்தா, பரத் பாய், தேஜாராம், ராஜேந்தர் சவுத்ரி ஆகியோர் இவ்வழக்கு தொடர்பாக இதுவரை கைதுச்செய்யப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்புகளுக்கு முக்கிய சூத்திரதாரியாக விளங்கிய ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரச்சாரக் சுனில் ஜோஷியை, ஹிந்துத்துவா தீவிரவாதிகளே கொலைச் செய்துள்ளனர்.
மக்கா மஸ்ஜிதில் நிகழ்ந்த குண்டுவெடிப்பை கண்டித்து அன்றைய தினம் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பேர் பலியானார்கள்.இச்சம்பவம் மிகுந்த சர்ச்சையை கிளப்பியிருந்தது. இக்குண்டுவெடிப்பின் பின்னணியில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷைச் சார்ந்த போராளி குழுக்கள் தாம் காரணம் என்று கூறி போலீஸ் ஏராளமான அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைதுச் செய்து சிறையில் அடைத்தது.பல வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைகளை அனுபவித்த இவர்களை பின்னர் நீதிமன்றங்கள் நிரபராதிகள் என்று விடுவித்தன.
இவ்விவகாரத்தில் தேசிய சிறுபான்மை கமிஷன் தலையிட்டதன் விளைவாக சிறையில் அடைக்கப்பட்டு போலீஸ் சித்திரவதைக்கு ஆளான 15 பேருக்கு தலா ரூ.3 லட்சம் வீதமும், போலீஸ்விசாரணையால் பாதிக்கப்பட்ட 46 பேருக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதமும் வழங்கப்படும் என்று 2011-ஆம் ஆண்டு ஆந்திர மாநில அரசு அறிவித்தது.மேலும் அன்றைய காங்.முதல்வர் சட்டப்பேரவையில் மன்னிப்பும் கோரினார். எனினும், அண்மையில் ஹைதராபாத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்காக மீண்டும் போலீஸ் ஏற்கனவே பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டதுசர்ச்சையை கிளப்பியது.
இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு 16 மாதம் சிறையில் அடைக்கப்பட்ட ஐ.டி எஞ்சீனியர் 28 வயதான ஸைத் இம்ரான் தனக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை என்று கூறுகிறார். முன்பு இம்ரான் பணியாற்றிய சிறியதொரு நிறுவனத்தின் உரிமையாளர், இம்ரானிடம் நற்சான்றிதழை கேட்டுள்ளார்.சான்றிதழை அரசு வழங்கவில்லை என்பதால் இம்ரானை, உரிமையாளர் வேலையில் இருந்து நீக்கிவிட்டார்.மேலும் தனக்கு இழப்பீடும் கிடைக்கவில்லை என்று இம்ரான் கூறுகிறார்.மேலும் உயர்கல்வி கற்க வெளிநாட்டிற்கு செல்வதற்காக பாஸ்போட்டுக்கு விண்ணப்பித்தும் இதுவரை கிடைக்கவில்லை என்று இம்ரான் தெரிவிக்கிறார்.
குண்டுவெடிப்பில் தனது தந்தையையும், சகோதரியின் கணவரையும் இழந்த ரியாஸ் கானுக்கு மத்திய அரசு வாக்களித்த ஒரு லட்சம் ரூபாய் இதுவரை கிடைக்கவில்லை.மாவட்ட ஆட்சி தலைவருக்கு இதுத் தொடர்பாக 15 விண்ணப்பங்கள் அனுப்பியுள்ளதாக ரியாஸ் கான் கூறுகிறார். பொருளாதார நெருக்கடி காரணமாக இவரது இளைய சகோதர்களின் படிப்பு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.அரசுஅறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகையும், சலுகைகளும் இவ்வளவு ஆண்டுகள் கழிந்த பிறகும் பலருக்கும் கிடைக்கவில்லை என்று அதிகமான புகார்கள் எழுந்துள்ளன.
0 comments:
Post a Comment