Friday, May 3, 2013

இந்திய மக்கள் தொகை 121 கோடியை தாண்டியது!

                          1 May 2013 india-population-03-030611-950
 
புதுடெல்லி:இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடியை தாண்டியுள்ளது.
2011-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் இறுதிப் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
 
அதன் விவரம் பின்வருமாறு:அந்தப் பட்டியலின்படி இந்திய மக்கள் தொகை 121 கோடியைத் தாண்டியுள்ளது. துல்லியமான தொகை (1,210,726,932) 121 கோடியே 7 லட்சத்து இருபத்து ஆறாயிரத்து 932. பொதுவாக மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 17.7 (2001 முதல் 2011 வரை) சதவீதம் அதிகரித்துள்ளது.இதில் பெண்களின் விகிதம் (18.3), ஆண்களின் விகிதத்தை (17.1) விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 10 ஆண்டுகளில் ஆண்களின் எண்ணிக்கை 9 கோடியே 97 லட்சமும் பெண்களின் எண்ணிக்கை 9 கோடியே 99 லட்சமும் அதிகரித்துள்ளது.
 
நாட்டில் ஒட்டுமொத்தமாக மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் அதிகமாக உள்ள மாநிலங்களில் பிகார் (25.4) முதலிடத்தைப் பிடித்துள்ளது. மற்ற மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் சராசரியாக 20 சதவீதமாக உள்ளது.
 
இந்தியாவில் கிராமப்புறங்களில் சுமார் 84 கோடி பேரும் நகர்ப்புறங்களில் சுமார் 38 கோடி பேரும் வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. 1951-ஆம் ஆண்டை ஒப்பிடும்போது தற்போது நகர்ப்புற மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 31.2 சதவீதம் அதிகரித்துள்ளது. நகர்ப்புற மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் அதிகம் உள்ள மாநிலங்களின் வரிசையில் தலைநகர் டெல்லி 97.5 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.கோவா, மிசோரம், தமிழகம், கேரளம், மகாராஷ்டிர மாநிலங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.
 
நாட்டில் கடந்த 2001-ஆம் ஆண்டு 64.8 சதவீதமாக இருந்த எழுத்தறிவு விகிதம் 2011-ஆம் ஆண்டில் 73 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது ஒட்டுமொத்தமாக நாட்டின் எழுத்தறிவு விகிதம் 8 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 5.6 சதவீதம் அதிகரித்துள்ள அதே நேரத்தில் பெண்களின் எழுத்தறிவு 11 சதவீதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்களை விட பெண்கள் அதிக எழுத்தறிவு பெற்ற மாநிலங்களில் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி முதலிடத்தைப் (19 சதவீதம்) பெற்றுள்ளது. பீகார் (14.8), திரிபுரா (14) ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
 
பொதுவாக அனைத்து மாநிலங்களிலும் ஆண்களை விட பெண்களின் எழுத்தறிவு விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளது. மிசோரம் மாநிலத்தில் மட்டும் ஆண்-பெண் எழுத்தறிவு விகிதம் சரி சமமாக உள்ளது.

0 comments:

Post a Comment